நீ அவன் இளவரசி அல்ல
நீ உன்னை ஆளும் மகாராணி 


- நிகிதா கில்


நம்மை நாமாக ஏற்றுக்கொள்ளும் நாளில்தான் நாம் ஆளுமையாகிறோம். ஆண்களின் ஓவர் ஹீரோயிசத்தால் அலுத்துப்போன காலத்தில் தென்னிந்திய சினிமா கண்ட அப்படியானதொரு ஆளுமையின் இருபத்து ஆறாவது நினைவுதினம் இன்று. சில்க் ஸ்மிதா... பெண்கள் உடல் தெரிய உடை அணிந்தால் அவள் ஒழுக்கம் கெட்டவள், கிளாமராகத் தெரிந்தால் அவள் பாலியல் தொழில் செய்பவள், பல ஆண்களுடன் தொடர்புடையவள் என அடுக்கடுக்காக ஒருத்தியின் குணத்தை அறுவை சிகிச்சை செய்யும் சமூகத்தில் என் உடல்தான் என் ஆயுதம் என அதே சாடித்திரியும் சமூகத்தை சினிமாவின் மூலம் தன் காலடியில் கிடக்க வைத்தவர்.


வெயில் ஒளிபட்டு மினுங்கும் வெண்கல நிறச் சருமம், மேகப் பொதி போன்ற நீளக் கூந்தல், ஏஞ்சலினா ஜோலிக்கள் இறைஞ்சக் கூடும் நீண்ட நெளிவான கால்கள் என பெண்களே காதல் கொள்ளும் காந்தக்கண்ணழகி சில்க் ஸ்மிதா. பலகோடி கொழிக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் மெகா ஸ்டார்களின் படங்கள் அவரது நளினத்தையும் , கிறங்கடிக்கும் பார்வையையும் ட்ரம்ப் கார்ட்டாக நம்பித்தான் வெளியிடப்பட்டன என்று சொன்னால் அது மிகையான சொல்லில்லை.





பிறந்தது கரூரில் என்றாலும் வளர்ந்தது எல்லாம் விஜயலட்சுமியாக ஆந்திர மாநிலத்தில், நான்காம் வகுப்பு வரைதான் படிப்பு. வீட்டில் பெண் பிள்ளை பிறந்தால் அவளைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து இளவயதிலேயே யாருக்கேனும் மணமுடித்துவிடும் வழக்கம் இன்றும் நடுத்தரவகுப்புக் குடும்பங்களிலும் கிராமப்புறங்களிலும் அதிகம் உண்டு. இந்த வழமை விஜயலட்சுமியையும் விட்டுவைக்கவில்லை. சிறுவயதிலேயே மணம் முடித்துவைக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம், நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்தவர் ஒரு மலையாளப் படத்தில் நடித்தார் பின்னர் வறுமை காரணமாக சினிமாவில் ஒப்பனைக் கலைஞராகச் சேர்ந்தார். சைட் ஆர்டிஸ்டுகளுக்கு மேக்கப் போடும் பணி. மேக்கப் போட்டு வந்தவரின் திறமையை கண்டறிந்த நடிகர் வினு சக்கரவர்த்தி, அவரை ‘சிலுக்கு’ என்னும் கதாப்பாத்திரத்தில் தனது திரைப்படத்தில் மறுஅறிமுகப்படுத்தினார். வறுமையில் உழன்ற ஒரு கலைஞருக்கு வினு சக்கரவர்த்தி வாழ்வளித்தார் என்றாலும் உண்மையில் வறுமையில் உழன்றிருந்தது என்னவோ தமிழ் சினிமாதான். ஹீரோயின் என்றாலே ஹீரோக்களுக்கு அண்டர்ப்ளே செய்ய வேண்டும் என்கிற சினிமாவின் எழுதப்படாத விதியை மாற்றினார். சிகரேட் தூக்கிப்போட்டு ஸ்டைல் காட்டி வீர வசனம் பேசிய அதே ஹீரோக்கள் இவருடன் ஒரு பாடலில் நடிக்கக் கால்ஷீட் கேட்டு போட்டி போட்டனர். 




முத்தக் காட்சிகளுக்கும் முதலிரவுக் காட்சிகளுக்கும் மலரும் மலரும் முட்டிக்கொள்ளும் இடத்துக்கு கேமிராவைத் திருப்பிய கோழைத்தனமான சினிமாவில் தன் இதழ் சுழித்து கண்களிலேயே காமம் பேசி கிறங்கடிக்கும் நடனத்தால் 


‘அச்சாரத்தப் போடு 
கச்சேரியக் கேளு
சின்ன உடல் சிலுக்கு
ஜில்லுனுதான் இருக்கு..’ 


எனப் பச்சையான பாடல் வரிகளுக்கு போல்டாக நடிக்கும் தைரியம் எல்லாம் ஸ்மிதாவுக்கு மட்டுமே உரித்தானது. உண்மையில், தனது தொடர்ச்சியான கிளாமர் தேர்வுகளால் ஹார்ட்கோர் ரொமான்ஸ் எல்லாம் ஆண்களுக்குதான் சாப்ட்டான ரொமான்ஸ் காட்சிகள் மட்டும்தான் பெண்களுக்கு என இருந்த சினிமாவின் எழுதப்படாத விதியை ஸ்மிதா மாற்றினார். 




நான்கு வருடத்தில் மட்டும் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் மீது சர்ச்சைகள் குவியத் தொடங்கின, ஆண் நடிகர் முன்பு எப்படி அவர் கால் மேல் கால் போட்டு அமரலாம்? என்றார்கள். முதலமைச்சரின் விழாவில் பங்கேற்காதது அவரது தலைக்கணத்தைக் காட்டியது என்றார்கள். அவை அத்தனையும் பின்னர் மறுக்கப்பட்டாலும் ஆணாதிக்கம் நிறைந்த சினிமாவில் எவருக்கும் இல்லாத பெருந்துணிவு  இவர் ஒருத்திக்கு மட்டும் இருந்தது என்றால் அந்தத் தலைக்கணமும் ஒருவகையில் கவர்ச்சிதான்.


இந்தப் பெரும் ஆளுமை தனது 35 வயதிலேயே தனது வாழ்வை முடித்துக்கொண்டார். சினிமா தயாரிப்பு தோல்வி, காதல் தோல்வி என பல தோல்விகளை அவர் தூக்கிட்டுக் கொண்டதற்குக் காரணமாகச் சொன்னார்கள். உண்மையில் அது ஒரு ஆளுமையை அங்கீரிக்கத் தெரியாத சமூகத்தின் தோல்வி. நேற்று முளைத்து நாளை வாடும் ஹீரோயிசக் காளான்களுக்கு இடையே ‘சில்க்’ ஸ்மிதா என்னும் தனித்துவம் நிரந்தரமானவர்.