சவுதி அரேபியாவில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தனக்கு முத்தலாக் கொடுத்ததாக 27 வயது முஸ்லிம் பெண் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார்.


வாட்ஸ் அப்பில் முத்தலாக்


உத்தரப் பிரதேசம், அலிகார் மாவட்டத்தின் டெல்லி கேட் பகுதியில் உள்ள ஷாஜமால் காலனியைச் சேர்ந்த இல்மா கான் எனும் இப்பெண்ணுக்கு அப்துல் ரஷீத் என்பவருடன் 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.


தொடர்ந்து கடந்த ஆண்டு அப்துல் ரஷீத் சவுதி அரேபியாவுக்கு வேலைக்காகச் சென்றுள்ளார். மேலும், தனது மனைவி இல்மாவுக்கு விசா பெற்றுத் தருவதாகவும் ரஷீத் உறுதி அளித்துள்ளார். ஆனால் இல்மாவுடன் வாழ மறுத்து சவுதி அரேபியாவில் இருந்து வாட்ஸ்அப் மூலம் முத்தலாக் கடிதத்தை PDF கோப்பு வடிவில்  அனுப்பியுள்ளார்.


இந்நிலையில், கணவர் வாட்ஸ்அப் மூலம் முத்தலாக் கொடுத்ததாகவும், தன்னிடமும் தன் குடும்பத்தினரிடமும் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்தியதாகவும் இல்மா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், இப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக நகர துணை காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் சிங் தெரிவித்தார்.


குண்டானதால் முத்தலாக்!


இதேபோல் உத்தரப் பிரதேசத்தில் முன்னதாக திருமணத்துக்குப் பின் குண்டான காரணத்தால் பெண் ஒருவருக்கு முத்தலாக் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


28 வயது நிரம்பிய நஜ்மா பேகம் உத்தரப் பிரதேசம், மீரட்டில் வசித்து வருகிறார். திருமணத்துக்குப் பின் தனது உடல் எடை அதிகரித்ததால் தன் கணவர் தனக்கு முத்தலாக் அளித்துள்ளதாக இவர் முன்னதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


எட்டு ஆண்டுகளுக்கு முன் முகம்மது சல்மான் என்பவரை மணந்த இந்தப் பெண் மணந்த நிலையில், இத்தம்பதிக்கு 7 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.


தொடர்ந்து இவரது உடல் எடை அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில், இவரது கணவர் மோசமாகப் பேசி சீண்டிய வண்ணம் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் நஜ்மாவை கொடுமைப்படுத்தத் தொடங்கியதுடன், வீட்டை விட்டும் துரத்தியுள்ளார்.


இப்பெண் கடந்த ஒரு மாதமாக தன் பெற்றோர் வீட்டில் வசித்து வரும் நிலையில், முன்னதாக ஐந்து பேருடன் அப்பெண் வீட்டுக்கு சென்ற முகம்மது சல்மான் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.


அதனைத் தொடர்ந்து முத்தலாக் சொல்லிவிட்டு அப்பெண்ணை விவாகரத்து செய்து விட்டதாகக் கூறி திரும்பியுள்ளார். 


முத்தலாக் தடை சட்டம்


’தலாக்’ (விவாகரத்து) என்ற வார்த்தையை மூன்று முறை உச்சரிப்பதன் மூலம் ஒரு இஸ்லாமிய ஆண் தனது மனைவியை சில நிமிடங்களில் விவாகரத்து செய்ய அனுமதிக்கும் ’முத்தலாக்’ முறை 2017ஆம் ஆண்டு இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்னதாக , முத்தலாக்கை அனுமதித்த தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.


இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரிலான முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து முத்தலாக்குக்கு எதிரான புதிய சட்டம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.


இதன்படி, தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். மேலும் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் குழந்தைக்கு கணவன் நிதி வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம்.