கேரளாவைச் சேர்ந்தவர் அருண். இவர் அந்த மாநிலத்தில் உள்ள காயங்குளம் கரிலாகுளங்கராவில் வசித்து வருகிறார். இவரது மனைவி சினேகா. அவருக்கு வயது 24. கர்ப்பிணி பெண்ணாக இருந்த சினேகா பிரசவத்திற்காக பருமலா என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 


நர்ஸ் கெட்டப்:


குழந்தை பிறந்த பிறகும் சிகிச்சைக்காக அனுஷாவை மருத்துவர்கள் கண்காணிப்பில் வைத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை செவிலியர் ஒருவர் சினேகா சிகிச்சை பெற்று வரும் அறைக்கு வந்தார். அப்போது, அந்த அறையில் அவரது தாயாரும் இருந்துள்ளார். அப்போது அந்த செவிலியர் சினேகாவிற்கு மருந்தே ஏற்றாத வெறும் ஊசியை சினேகாவின் நரம்பில் செலுத்த முயற்சித்துள்ளார். 




இதை சினேகாவின் தாயார் பார்த்து பதற்றமடைந்து கேட்டபோது, அந்த செவிலியர் எந்த பதிலும் கூறவில்லை. இதனால், அச்சமடைந்த அவரது தாயார் அருகில் இருந்த மற்ற செவிலியர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சினேகாவின் அறைக்கு வந்த மற்ற செவிலியர்கள் ஊசி செலுத்திய செவிலியர் புதிய நபராக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த பெண் ஊசியிட்ட சில நிமிடங்களில் சினேகாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவர்கள் சினேகாவிற்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.


சினிமா பாணியில் கொலை முயற்சி:


காவல்துறையின் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியது. சினேகாவை ஊசி போட்டு கொலை செய்ய முயற்சித்த பெண்ணின் பெயர் அனுஷா. அவருக்கு வயது 25. அவர் ஆழப்புலா மாவட்டத்தில் உள்ள காயங்குளத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் சினேகாவின் கணவர் அருணுக்கும் செல்போன் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணமான அருணை அனுஷா ஒருதலையாக விரும்பியுள்ளார். 




இதனால், அருணுடன் நிரந்தரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்ட அனுஷா, தனக்கு போட்டியாக உள்ள சினேகாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதையடுத்து, சினேகாவை கொலை செய்ய தான் படித்த பார்மஸி படிப்பை பயன்படுத்தியுள்ளார். மருந்து இல்லாமல் வெறும் காற்றை நமது நரம்பு வழியாக உடலில் செலுத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பார்கள் என்பதை அறிந்த அனுஷா, அதைப்பயன்படுத்தி சினேகாவை கொலை செய்ய முயற்சித்துள்ளார். (விஜயகாந்த் படத்தில் கூட இதை காட்சியாக காட்டியிருப்பார்கள்).


அப்போதுதான் போலீசிடம் அவர் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சினேகாவின் கணவர் அருணிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை உள்ளே புகுந்து செவிலியர் போல வேடமிட்ட இளம்பெண், குழந்தை பெற்றெடுத்த தாயை அறிவியல் முறையில் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் படிக்க: Crime: அராஜகம்.. நட்ட நடுரோட்டில் போலீஸ் எஸ்.ஐ. சுட்டுக்கொலை - உத்தரபிரதேசத்தில் கொடூரம்..!


மேலும் படிக்க: Crime: அடக்கொடுமையே! மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்; கோபத்தால் வெறிச்செயல்...பெங்களூருவில் ஷாக்!