மரக்காணம் அருகே கொடுத்த கடனை திரும்ப கேட்டு மிரட்டியதால் மனமுடைந்த பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த அனுமந்தை மீனவர் கிராமம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது (50). இவர் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் அதே பகுதியில் தீபாவளி பண்ட் மட்டும் சீட்டும் நடத்தி வந்துள்ளார். இதனால் ராஜேந்திரனுக்கு அதிக அளவில் கடன் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக அவர் இரண்டு ஆண்டுக்கு முன் வீட்டை விட்டு வெளியில் சென்று உள்ளார். அதிலிருந்து அவர் வீடு திரும்பவில்லை அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற விபரமும் உறவினர்களுக்கு கூட இதுவரையில் தெரியவில்லை என்று கூறுகின்றனர்.


இந்நிலையில் ராஜேந்திரனின் மனைவி மணிமேகலை வயது (45) இவர் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசனிடம் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கி தன் கணவர் விட்டுச் சென்ற கடன்களை அடைத்துள்ளார். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி சீனிவாசனின் மனைவி மதி, மணிமேகலையின் வீட்டிற்குச் சென்று நீங்கள் எங்களிடம் கடன் வாங்கியது 5 லட்சம் அதற்கு வட்டி இப்பொழுது 5 லட்சம் ஆகிவிட்டது. எனவே வட்டியும் அசலுமாக சேர்த்து எங்களுக்கு 10 லட்சம் இப்பொழுது நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது மணிமேகலைக்கும் மதிக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.


இதனால் மதி, மணிமேகலையை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்தி உள்ளார். இதனால் மனமுடைந்த மணிமேகலை எலி மருந்தை சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி உள்ளார். இதனைப் பார்த்த அவரின் உறவினர்கள் புதுவை ஜிப்பர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற மணிமேகலை சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து அவரது உறவினர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.