மீன் குஞ்சுகள் நீச்சல் பயிற்சிக்கு செல்வதில்லை… பறவை குஞ்சுகள் எந்த ஏரோ நாடிக்கல் வகுப்பிலும் பங்கேற்றதில்லை… ஆனாலும் அவை மிதக்கின்றன, பறக்கின்றன. அது போல தான் கவிப்பேரரசு என அனைவராலும் கொண்டாடப்படும் வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்துவும். அண்ணன் மதன் கார்கி போலவே அவரும் பாடலாசியர் என்பதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால் வரிகள் இயற்கையிலேயே அவர்களின் ஜீன்களில் கலந்திருக்கிறது. 1982 மே 29 அன்று பிறந்த கபிலனுக்கு இன்று 39வது பிறந்தநாள்.




கவிஞர், நாவலர், வசனகர்த்தா, சமூக ஆர்வலர் என பல்வேறு முகங்களை கொண்டவர் கபிலன். கே.வி.ஆனந்த் இயக்கிய கவண் திரைப்படத்தின் திரைக்கதை, அஜித் நடித்த விவேகம் படத்தில் திரைக்கதை எழுதி கதாசிரியராக தன்னை நிரூபித்த கபிலன், உதயம் என்.எச்4, பொறியாளன், ஜீவா, அனேகன், இந்திரஜித், பேய்கள் ஜாக்கிரதை, கவண், விவேகம் படங்களில் பாடல் ஆசிரியராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.


நீலவானம் மாய்ந்த போதும்…
நீ இருப்பாயே…
தேவகானம் தூய மெளனம்…
நீ கொடுப்பாயே…


பொல்லாத போர்களில்…
உன் வேர்வையாக பூத்திருப்பேனே…
நில்லாத ஓடையாய்…
உன் கைபிடித்து ஓடுகின்றேனே…


ஆலகால…
நஞ்சு பாய்ந்தது…
மெல்ல மீள்வோமே…
பிள்ளை தெய்வம்…
மண்ணில் தோன்றிட…
வாழ்வு நீள்வோமே…


என காதலாட காதலாட கதை சொல்லிய கபிலனின் வரிகள், நவீன காதலின் ஆர்ப்பரிப்பு. இன்று ஆக்சிஜனுக்கு ஒவ்வொரு உயிரும் ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் 2017 ல் ஆக்சிஜனை காதலுக்கு துணைக்கு அழைத்து, அதை ஐசியூ.,வில் அட்மிட் செய்தவர் கபிலன்.


‛‛ஆக்சிஜன் தந்தாயே


முன்னொரு பொழுதினிலே


மூச்சுக் காற்றை மொத்தம்


திருடிப் போனாய் எதனாலே…!’’


என, காதலனின் மூச்சுத்திணறலை காட்சிப்படுத்தியவர்.




கபிலனுக்கு பெரிய அடையாளம் இருக்கிறது. குடும்ப பின்னணி இருக்கிறது. ஆனாலும் அவர் சுயமாகவே சமூகத்தில் வலம் வருகிறார். ’அப்பாவின் உயரம் உங்களுக்கு பாரமா?’ என ஒரு முறை கபிலனிடம் கேட்ட போது, ‛‛வானம் பறவைக்கு பாரமாகாது,’’ என பதிலளித்தவர். பல்லாயிரம் இளைஞர்களை கொண்ட இளைஞர் இயக்கத்தை வழிநடத்தியவர் என்பதால் சமூக அக்கறையில் சற்றும் சளைக்காதவர் கபிலன் வைரமுத்து.


‛எழுத்து ஒன்று தான்... அது செய்து கொள்ளும் வெவ்வேறு ஒப்பனைகள் தான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்,’ எனக்கூறும் கபிலன், தன் திரைபயணம் துவக்கத்தில் எளிதாக இல்லை என்றும், பல எதிர்பாராத தடைகளையும், புறக்கணிப்பை தாண்டி தான் பயணம் செய்ய வேண்டியிருந்தது என முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதிலிருந்தே அவரது தனித்தன்மை நமக்கு தெரியவரும்.




‛‛பாராட்டு, விமர்சனங்களை படித்துவிட்டு, கொஞ்சம் நேர பறந்துவிட்டு சில நொடிகளில் தரையிறங்கிவிடுவேன். படைப்பை மேன்மைபடுத்த உதவும் ஆரோக்கியமான விமர்சனங்களில் இருந்து கற்றுக்கொள்வேன். படைப்பை முழுவதும் புரிந்து கொள்ளாமல், விமர்சனம் செய்கிறவர்களுக்கு என்னால் முயன்ற விளக்கத்தை தருவேன். புரிந்து கொள்ள முடியாமல் தவறான கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்கிறவர்களுக்கு ஒருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி விட்ட விலகிவிடுவேன்,’’ இந்த வரிகள் போதும், இது தான் கபிலன்.


கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் போது, கவிப்பேரரசின் வாரிசு கவி பாடுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. ஆனால் கவிஞன் என்பதை விட நல்ல மனிதன் என்கிற பாதையை தான் பெரும்பாலும் கபிலன் தேர்வுசெய்திருக்கிறார். தமிழ் பரப்பும் இந்தப் பணியில் இன்னும் பல சாதனைகளை எட்டி, விண்ணை முட்டி புகழ் பெறட்டும் கவிஞர் கபிலன் வைரமுத்து என அவரது பிறந்த நாளில் வாழ்த்துகிறது ABP நாடு!