Crime: ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண்ணை, கணவர் முன்பே 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா வந்த ஸ்பெயின் தம்பதி:
ஆசிய நாடுகளை சுற்றிப் பார்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி ஒரு பைக் ரைடைத் திட்டமிட்டிருந்தனர். ஆசிய நாடுகளில் பைக்கில் சென்று தங்களுக்கு பிடித்தமான இடங்களில் சுற்றி பார்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் இந்த தம்பதி முதலில் பாகிஸ்தான் சென்றனர்.
பாகிஸ்தானில் பல்வேறு இடங்களுக்கு சென்ற இந்த தம்பதி அங்கிருந்து வங்கதேசம் சென்றனர். வங்க தேசத்தில் முக்கியமான இடங்களை சுற்றி பார்த்த தம்பதி, அங்கிருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து, பீகார் வழியாக ஜார்கண்ட் வந்துள்ளனர். இந்தியாவைக் கடந்து பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்பது தான் இவர்களிடம் திட்டமாக இருப்பதாக தெரிகிறது.
பைக்கிலேயே பல்வேறு இடங்களுக்கு செல்லும் இந்த தம்பதி இரவு நேரத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 1ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் தும்கா மாவட்டத்தில் இந்த தம்பதி இரவில் சென்றடைந்துள்ளனர்.
பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை:
அங்கு, தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு 11 மணியளவில் சுமார் 7 முதல் 10 பேர் கொண்டு கும்பல், தற்காலிக கூடாரம் இருக்கும் இடத்தில் புகுந்து, சுற்றுலா தம்பதியை கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர், அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த நேரத்தில், அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வெளிநாட்டு பயணிகள் இருவரும் சாலையோரத்தில் இருந்ததை பார்த்தனர். ரத்த காயங்களுடம் இருந்த இருவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்போது தான், அந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் முழு வீச்சில் தேடி வருகின்றனர்.
3 பேர் கைது:
ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நேற்று இந்த விவாகாரத்தை பாஜக எழுப்பியது. ஜார்க்கண்ட் பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி சட்டப்பேரவையில் பேசுகையில், ”வெளிநாட்டவர்களுடன் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, ஜார்கண்ட் மாநிலத்துக்கு யார் வர விரும்புவார்கள்? இங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநில அமைச்சர் மிதிலேஷ் தாக்கூர், "இது துரதிர்ஷ்டவசமானது. குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிக்கமாட்டார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்