மேற்கு வங்க மாநிலம் பஹ்ராம்பூரில் திரிணாமுல் காங்கிரஸின் உள்ளூர் தலைவர்களில் ஒருவரான சத்யன் சௌத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் பிப்லாப் குண்டு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய பிப்லாப் குண்டு, ”இது ஒரு சோகமான சம்பவம். சௌத்ரி கட்சி தொடங்கியதில் இருந்தே கட்சிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மரணம் தொடர்பாக காவல்துறை நியாயமான விசாரணையை நடத்த வேண்டும். காவல்துறையினர் இதைப் பற்றிக் கண்டுபிடித்து நியாயமான விசாரணை நடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். ” என தெரிவித்தார்.


இந்தோ-ஆசிய செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, ’திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முர்ஷிதாபாத் மாவட்ட பொதுச் செயலாளர் சத்யன் சௌத்ரி (ஞாயிறு) நேற்று மதியம் முர்ஷிதாபாத்தில் உள்ள பரத்பூரில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் முன் தனது நெருங்கிய கூட்டாளிகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, மர்ம கும்பல் ஒன்றின் எதிர்பாராத தாக்குதலால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 


இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சம்பவ இடத்திற்கு வந்த மூன்று மர்ம நபர்கள் சத்யனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்’ என்று குறிப்பிட்டு இருந்தது. 


துப்பாக்கிச்சூடுக்கு பிறகு, ரத்தம் கொட்டிய சத்யன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சத்யன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். 






காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், படுகொலைக்குப் பின்னால் ஆளும் கட்சியில் உள்ள உட்பூசல்கள் காரணமாக இருக்கலாம். இறந்த உள்ளூர் தலைவர்களில் ஒருவரான சத்யன் சௌத்ரி கட்சியின் மாவட்டத் தலைமையின் மற்ற பிரிவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சி சார்ந்த விவகாரங்களில் இருந்து தன்னை ஒதுக்கித் தள்ளத் தொடங்கியுள்ளார். இப்படியான சூழ்நிலையில்தான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளனர். 


திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளூர் கட்சி தலைவர் சத்யன் சௌத்ரி ஒரு காலத்தில் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். அதன்பிறகு, சில கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக கூறப்படுகிறது. 


காங்கிரஸ் எம்.பியும், சத்யனின் நெருங்கிய நண்பருமான ஆதிர் ரஞ்சன், தனது நண்பரின் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து ஆதிர் ரஞ்சன், “மறைந்த சத்யன் சௌத்ரி எனது நெருங்கிய நண்பர். முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளியைக் கண்டுபிடித்து தண்டிக்குமாறு காவல்துறையினரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து முர்ஷிதாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூர்ய பிரதாப் யாதவ் கூறுகையில், ”இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில் இருந்து கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.