இன்று ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்தநாள். ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் ரசிகர்களை கவர்ந்த பொதுவான அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்


தமிழ் சினிமாவில் இளையராஜா இருக்கலாம். ஏ. ஆர் ரஹ்மான் இருக்கலாம். ஆனால் ஹாரிஸ் ஜெயராஜுக்கு எப்போது ஒரு தனி இடம் ரசிகர்கள் மனதில் இருக்கிறது.  ஒரு படத்தில் ஹீரோவின் இண்ட்ரோ பாடலாக இருக்கட்டும் அல்லது மெலடியாக இருக்கட்டு ஒவ்வொரு வகைமையிலும் அவரது தனித்துவம் வெளிப்படும். ஹாரிஷ் ஜெயராஜின் இசையில் ஒரு சில பொதுவான அம்சங்கள் இசை ரசிகர்களை கவர்கின்றன.


பாம்பே ஜெயஸ்ரீ


ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் மிக வசீகரமான ஒலிக்கக் கூடியது. கர்நாடக இசையில் தீவிர பயிற்சி இருக்கும் பாம்பே ஜெயஸ்ரீ பெரும்பாலும் இசைக்கச்சேரிகளில் அதிகம் பாடுபவர். இளையராஜா அவரை பாரதி படத்தில் பாட வைத்தார். ஆனால் அதுவும் ஒரு தெய்வீகமான பாடல்தான். ஹாரிஸ் ஜெயராஜ் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலை பெண்ணின் காமம் , ஏக்கம் , துன்பம் அதிகம் ஓங்கியிருக்கும் உணர்ச்சிகளுக்கு பயன்படுத்துகிறார். மின்னலே படத்தில் ’வசீகரா’, மஜ்னு படத்தில் ’முதல் கனவே ‘, காக்க காக்க படத்தில் ’ஒன்றா ரெண்டா’, பச்சைகிளி முத்துச்சரம் படத்தில் உனக்குள் நானே, சத்யம் படத்தில் செல்லமே செல்லமே, வாரணம் ஆயிரம் படத்தில் அனல் மேலே பனித்துளி போன்ற பாடல்களை உதாரணமாக சொல்லலாம்.


குத்துப்பாட்டில் மெலடி


பெரும்பாலான படங்களின் முதல் பாடல் ஒரு குத்துப் பாடலாக இருப்பது வழக்கம். ஆனால் ஹாரிஸ் இசையமைத்தப் படங்களில் சில முதல் பாடலே மெலடியாக இருக்கும். அப்படியே குத்துப் பாடலாக இருந்தாலும் அதன் சரணத்தை மெல்லிசையாக அமைத்திருப்பார்.  மஜ்னு படத்தில் மெர்குரி மேலே , சாமுராய் படத்தில் மூங்கில் காடுகளே, கோவில் படத்தில் காலேஜுக்கு போவோம், அயன் படத்தில் வரும் பளபளக்குற மற்றும் ஆதவன் படத்தில் வரும் டமக்கு டமக்கு பாடல் குத்துப்பாடலாக ஆரம்பித்தாலும் இந்தப் பாடல்களின் சரணத்தில் வரும் மெலடிதான் நமக்கு அதிகம் பிடித்தவையாக இருக்கும். வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு ராப் மற்றும் மெலடி கலந்து கற்க கற்க பாடலை இசையமைத்திருப்பார்.


சத்யம் படத்தில் ஆறடி காத்தே பாடலில் ஹரிஹரன் மெல்லிய குரலில் ’யாரு இவன் யாரு கொம்பனுனு கூறு என்று பாடும்போது எதோ படத்தின் ஹீரோவின் மேல் ஹீரோவுக்கு காதல் வந்தது போல் இருக்கும். 


இளமைக் குரல்


ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடும் பெரும்பாலான பாடகர்கள் ஒரே குரல் தன்மையுடையவர்கள். எஸ். பி பாலசுப்ரமணியனுக்கும் யேசுதாஸுக்கு இடையிலான வித்தியாசங்கள் இந்த பாடகர்களுக்கு நடுவில் இருப்பதில்லை. எஸ்.பி.பி மற்றும் மனோவுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தான் ஹாரிஸ் ஜெயராஜ் தேர்வு செய்யும் பாடகர்களுக்கு நடுவில் இருக்கும் வேறுபாடு. ஹரிஹரன் , நரேஷ் ஐயர், விஜய் பிரகாஷ்  , கார்த்திக் , பென்னி தயால் , உன்னி மேனன் என ஒரே சுருதியில் பாடக்கூடியவர்கள் இவர்கள். இவர்களின் குரல்களில் அமைந்த பெரும்பாலான பாடல்கள் ஒருவகையான இளமையும் துடிப்பும் அவரது இசைக்கு கொண்டு வருகின்றன. குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் எஸ்.பி.பி பாடிய பாடல்கள் இன்னும் தனித்துவமானவை . யம்மா யம்மா, என் காதல் தீ, என்னை விட்டு போன்ற ரொம்ப சோகமான பாடல்களுக்கு எஸ்.பி.பி யை தேர்வு செய்திருக்கிறார் ஹாரிஸ். 


ஜிப்ரிஷ்


ஹாரிஸின் இசையில் ஜிப்ரிஷ் அவ்வப்போது வந்து போவது தான். இது தவிர்த்து அவரது இசையில் ஷமனிக் இசை என்று சொல்லப்படும்  புத்த மதத்தின் இசை வகை அதிகம் பயன்படுகின்றன. மற்றும் ஒபெரா என்று சொல்லப்படும்  நாடக இசையை அவரது பாடல்களில் அதிகம் பார்க்கலாம். இனி ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை கேட்டால் அதிலுள்ள தனித்துவத்தை உணருங்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஹாரிஸ் ஜெயராஜ்..!