நாட்டின் இளைய சமுதாயம் பல ஆக்கப்பூர்வமான வழிகளில் முன்னேறி வரும் சூழலில், சிலர் வன்முறையிலும், தவறான பாதையிலும் செல்வது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் சினிமாவை மிஞ்சும் வகையில் சாலையில் மோதிக்கொண்ட இளைஞர்களால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


சினிமா பாணியில் மோதல்:


கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது உடுப்பி. இங்கு கடந்த 18ம் தேதி நள்ளிரவு சமயத்தில், ஆட்கள் நடமாட்டமற்ற பகுதியில் இளைஞர்கள் கும்பல் நட்ட நடுரோட்டில் இரண்டு கார்களில் மாறி, மாறி மோதிக் கொண்டனர். ஒரு வெள்ளை நிற காரில் வந்த ஒரு கும்பல் மற்றொரு காரில் இருந்தவர்களை, காரோடு இடித்தனர்.


அப்போது, அந்த காரில் இருந்து இருவர் இறங்கி வெள்ளை நிற காரில் இருந்தவர்களை தாக்க முயற்சித்தனர். ஆனால், வெள்ளை நிற காரை ஓட்டியவர் சினிமா பாணியில் தன்னுடைய காரை எதிரே இருந்தவர்கள் கார் மீது மோதினார். அப்போது, அதில் ஒரு கும்பலில் இருந்தவர் இரண்டு காருக்கும் நடுவில் சிக்கி தூக்கி வீசப்பட்டார்.






அதன்பின்பும் இரண்டு கார்களில் இருந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த இளைஞரை மற்றொரு காரில் இருந்த இளைஞர்கள் சரமாரியாக தாக்கினர். இரண்டு கும்பல் இளைஞர்களும் தங்கள் கையில் ஆயுதங்களை வைத்திருந்தனர். பின்னர், அடிபட்டு கீழே விழுந்த இளைஞரை அவரது நண்பர்கள் கும்பல் தங்கள் காரில் ஏற்றிக் கொண்டனர்.


மக்கள் சோகம்:


இந்த சம்பவத்தை அங்கே இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சண்டையில் மொத்தம் 6 பேர் ஈடுபட்டுள்ளனர். சண்டையில் ஈடுபட்டவர்களில் 4 பேர் தப்பியோடிள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பணம் கொடுக்கல் – வாங்கல் தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சினிமா பாணியில் நள்ளிரவில் சாலையில் இளைஞர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: 9 வயது சிறுவனை குத்திக்கொன்ற 13 வயது சிறுவன்; மதுரையில் பயங்கரம் - நடந்தது என்ன?


மேலும் படிக்க: நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 22 ஆண்டுகளாக வராத இழப்பீடு - தூத்துக்குடி விவசாயிகளின் கண்ணீர் கதை