நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே துலுக்கர்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமம் வடுகன்பட்டி. இப்பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் (63). இவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்தில் துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி சீதாராமலெட்சுமி (59). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் அவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் இருவரும் அதே ஊரில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ராமசாமி என்பவரும் தனது மனைவி மகாலெட்சுமியுடன் அதே ஊரில் தனியாக வசித்து வருகின்றனர். இருப்பினும் சீதாராமலெட்சுமிக்கும் அவரது மருமகள் மகாலெட்சுமிக்கும் அவ்வபோது சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் மகாலெட்சுமி இருந்துள்ளார். இந்த சூழலில் நேற்று அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த சீதாராமலெட்சுமி கம்பால் தாக்கப்பட்ட நிலையில் கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் செயின் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் சீதாராமலெட்சுமியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து கணவர் சண்முகவேல் காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முதற்கட்டமாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
அதில் ராமசாமிக்கு திருமணம் ஆனதில் இருந்து மாமியார்-மருமகள் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக சண்முகவேல் மகன் ராமசாமி மற்றும் மருமகளுக்கு தனது வீட்டின் பின்புறம் வீடு கட்டி கொடுத்து அதில் தனியாக குடியிருக்க வைத்துள்ளனர். இருப்பினும் மாமியாருக்கும், மருமகளுக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன்பும் நடந்த குடும்ப பிரச்னையை மனதில் வைத்திருந்த மருமகள் மகாலெட்சுமி மாமியாரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி நேற்று அதிகாலை தூக்கிகொண்டிருந்த மாமியார் சீதாராமலெட்சுமியை கம்பால் தாக்கி விட்டு பின் அவரது கழுத்தில் இருந்த 5½ பவுண் தங்க செயினை மர்மநபர் திருடி சென்றது போல் நாடகமாடி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட மாமியார் சீதாராமலெட்சுமி
ஆனால் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றிய காவல்துறையினருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் பெண் ஒருவர் பேண்ட் சட்டை அணிந்த படி கையில் கம்பும், ஹெல்மட்டும் எடுத்துக்கொண்டு உள்ளே செல்கிறார், இரண்டு அடி சென்றதும் மண்டை மேல் இருந்த கொண்டையை மறந்துவிட்டோம் என்று பின் வெளியே வந்து கையில் இருந்த ஹெல்மெட்டை தலையில் மாட்டிக் கொண்டு பின் வீட்டிற்குள் சென்றுள்ளார். பின் சீதாராமலெட்சுமியை கையில் இருந்த கம்பால் துடிக்க துடிக்க தாக்குகிறார். அவரது அலறல் சத்தம் நிற்கும் வரை அவரை தாக்கிவிட்டு பின் மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக அவரது கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் நகையை திருடி விட்டு சாதாரணமாக வெளியே செல்கிறார். இந்த காட்சி தற்போது சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சியை வைத்து மருமகள் மகாலெட்சுமி தான் இந்த சம்பவத்தை செய்தது என்பது தெரிய வந்துள்ளது. முன்னதாக காயமடைந்த மாமியார் சீதாராமலெட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து முதற்கட்டமாக கொலை முயற்சி வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தற்போது அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி மாமியார் சீதாராமலெட்சுமியை கொலை செய்த மருமகள் மகாலெட்சுமியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மகாலெட்சுமிக்கு 5 வயதில் ஒரு மகனும், 10 மாதத்தில் ஒரு மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. குடும்ப பிரச்சினை காரணமாக மருமகளே திட்டம் தீட்டி மாமியாரை துடிக்க துடிக்க அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது