திருச்சி மாவட்டம், தா.பேட்டையை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மனைவி சுபாஷினி. இவர் ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருதமுத்து இறந்து விட்டார். இந்த தம்பதியின் மகள் யுவ பிரியா (வயது 15). இவர் துறையூர் தாலுகா, கண்ணனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் முசிறி தாலுகா திருத்தலையூர் பகுதியில் வசிக்கும் தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கும், அப்பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வரும் 17 வயது மாணவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகிவந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். இதனை சுபாஷினியும், அவரது உறவினர்களும் கண்டித்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 28ம் தேதி யுவபிரியா பிறந்த நாளையெட்டி அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக கல்லூரி மாணவன் இன்ஸ்டாகிராமில் யுவபிரியாவுடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த யுவபிரியாவின் உறவினர்கள் மற்றும் தாயார் இதுகுறித்து யுவபிரியாவிடம் கேட்டதாக தெரிகிறது. இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். 

 



 

மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து மனம் உடைந்து காணப்பட்ட யுவபிரியா கடந்த 29-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மாணவி யுவபிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின் மேற்பார்வையில் தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் யுவபிரியாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் யுவபிரியாவின் தற்கொலைக்கு காரணமான கல்லூரி மாணவனை கைது செய்ய வேண்டும் என யுவபிரியாவின் தாய் சுபாஷினி வலியுறுத்தி உள்ளார். 10-ம் வகுப்பு தேர்வு எழுத இருந்த நிலையில் மாணவி யுவபிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தா.பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண