விழுப்புரம்: விழுப்புரம் அருகே தனிநபரின் ஆதாரை கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலி சிம் கார்டு மோசடியில் ஈடுபட்ட 4 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பாரதி நகரில் வசித்து வரும் வெண்னி என்பவர் தனியார் நிறுவனத்தில் டெலிகாலிங் வேலை செய்து வருகிறார். அதற்காக அவருக்கு சிம் கார்டுகள் தேவைப்பட்டதால் சித்தணி கிராமத்தை சேர்ந்த ராஜ், அன்பரசு, சதீஷ்குமார், தமிழ்ச்செல்வன், சத்தியமூர்த்தி, கிருபா ஆகியோர் மூலமாக 10-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கியுள்ளார். இதற்காக தன்னுடைய கைரேகையை பயன்படுத்தியதோடு அவர்களுக்கு தனது ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களையும் கொடுத்துள்ளார்.


இதனை ராஜ் உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து தவறாக பயன்படுத்தி 100-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கி அதனை வேறு நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளதும், அந்த நபர்கள், அந்த சிம் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணம் மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.


இச்சம்பவம் குறித்து வெண்ணி, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் ராஜ், அன்பரசு, சதீஷ்குமார், தமிழ்செல்வன் ஆகிய 4 பேரும் சித்தணியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற 4 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் 100-க்கும் மேற்பட்ட புகைப்படம், ஆதார் மற்றும் கைரேகைகளை பயன்படுத்தி சிம் கார்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சத்தியமூர்த்தி,  கிருபா ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.