கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் மூன்று பேர் உயிரிழந்துவிட்டார்கள் என்று பரவியுள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


உயிரிழந்த இளைஞர்கள் - கதறும் குடும்பத்தினர்


கள்ளக்குறிச்சி அருகே கருனாபுரம் பகுதியில் நேற்று கள்ளச்சாரயம் விற்கப்பட்டதாகவும் அதனை வாங்கி அருந்திய 3 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அவர்களது குடும்பத்தினர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர். பிரவீன், சுரேஷ் என்ற இரண்டு இளைஞர்களும் சேகர் என்பரும் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


”கள்ளச்சாராயம்தான் - இந்த உயிர்களே கடைசியாக இருக்கட்டும்” - குடும்பத்தினர்கள் வேதனை


மூன்று பேர் உயிரிழந்ததற்கு காரணம் கள்ளச்சாரயம்தான் என்றும் இதன்பிறகாவது எந்த உயிர்களும் போகாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர்கள் கண்ணீருடன் பேட்டி கொடுத்துள்ளனர்.


கள்ளச்சாரய சந்தையா கள்ளக்குறிச்சி ?


கல்வராயன் மலையில் போலீசுக்கு மாமுல் கொடுத்துவிட்ட பலர் பேரல்கள் ஊற வைத்து கள்ளச்சாரயம் காய்ச்சுவதாகவும் லஞ்சம் வாங்கும் ஒரு சில போலீசாரால்தான் கள்ளக்குறிச்சியில் பல இடங்களில் கள்ளச்சாரய விற்பனை படுஜோராக நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  இது தொடர்கதையாகி வருவதாகவும் இதற்கு குழு அமைத்து உடனடியாக தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மதுவிலக்கு போலீசார் என்ன செய்கிறார்கள் ?


சட்டவிரோதமாக மது விற்பதையும் கள்ளச்சாரயம் காய்ச்சுவது, அதை விற்பது உள்ளிட்டவைகளை தடுப்பதையுமே நோக்கமாக கொண்டு செயல்படும் தனிப்பிரிவான மதுவிலக்கு போலீசார் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் சரியாக செயல்பட்டிருந்தால், கல்வாராயன் மலையில் ஒருவர் கூட சாராயம் காய்ச்சியிருக்க முடியாது எனவும் அந்த பகுதி மக்கள் வேதனையுடன் பகிர்கிறார்கள்


எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கடும் கண்டனம்


கள்ளச்சாராயத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுசெயலாளருமான எடபபாடி பழனிசாமி, ”இந்த விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். "கள்ளச்சாராயம் இல்லை- மெத்தனால்" என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.






பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டனத்தில், ”





கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஐந்து பேர், கள்ளச்சாராயத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பத்து பேருக்கும் மேல், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்கள் என்று தெரிகிறது. மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில், கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது. கள்ளச்சாராய வியாபாரிகளுடன், திமுக அமைச்சர் திரு மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விவரம் கடந்த ஆண்டே தெரியவந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்துடைப்புக்காக நாடகமாடி, மீண்டும் ஐந்து உயிர்களைப் பறித்திருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் திரு மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் திரு முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் அவர்களை வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.