விழுப்புரம்: பெண்ணிடம் ரூ.15 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஆசிரியர் பணி நியமன ஆணையை போலியாக தயாரித்தவர் கைது செய்யப்பட்டார்.

போலி பணி நியமன ஆணை


செஞ்சி தாலுகா இல்லோடு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி  உள்ளது. இப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக சுமதி என்பவர் கடந்த 19.12.2015 அன்று முதல் பணியாற்றி வந்துள்ளார். இவர் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தின் பணி நியமன ஆணையை போலியாக தயார் செய்து பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜி, இது பற்றி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சுமதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கு, விசாரணையில் இருந்து வந்த நிலையில் சுமதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

ஒருவர் கைது


மேலும் இந்த மோசடி தொடர்பாக போலீசார், சுமதிக்கு சம்மன் அனுப்பி அவரை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஆசிரியர் பணிக்காக ரூ.15 லட்சத்தை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா சேவூர் இ.பி.காலனி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் (42) என்பவரிடம் கொடுத்ததும், பணத்தைப் பெற்ற சக்திவேல், சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தின் பணி நியமன ஆணையை போலியாக தயார் செய்து சுமதியிடம் கொடுத்துள்ளதும் தெரியவந்தது.

வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற சக்திவேலை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்த போலீஸ்


இதையடுத்து சக்திவேலை பல்வேறு இடங்களில் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை சேவூரில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற சக்திவேலை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை செஞ்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.