நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே, நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர், கடந்த அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினர். இவர்களைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் விலகினர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் விலகியது, நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கதுரை அக்கட்சியில் இருந்து விலகுவதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். 


அந்த முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: நாம் தமிழர் கட்சியின் "மாநகர மாவட்ட செயலாளர்" என்ற பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்! இதுநாள் வரையில் என்னோடு உடனிருந்து ஒத்துழைப்பு கொடுத்த தோழமைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவரின் வழியில், தமிழ்தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும்" என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அழகாபுரம் தங்கதுரை கடந்த 15 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக செயல்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் தங்கத்துரையின் ஆதரவாளர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி வெளியே வருவார்கள் என கூறப்படுகிறது. இது சேலம் மாவட்டத்தை மட்டுமின்றி தமிழக முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



இது தொடர்பாக அழகாபுரம் தங்கதுரையை தொடர்பு கொண்டு கேட்டபோது, "நாம் தமிழர் கட்சியின் கொள்கை மாறிவிட்டது. நாங்கள் பிரபாகரனின் கொள்கையை ஏற்று கட்சியில் இணைந்தவர்கள். ஆனால் தற்போது நாம் தமிழர் கட்சியை சர்வாதிகார சீமான் நடத்தி வருகிறார். கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்சித் தலைவர் என்றால் கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். ஆனால் சீமான் பொதுக் கூட்டத்திற்கு மட்டுமே தன்னை அழைக்க வேண்டும் என்கிறார். பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் போது கூட கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுவதில்லை. இதனால் கட்சியில் அனைவரும் நீண்ட காலமாக அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். 


Mens Day 2024 Wishes: சர்வதேச ஆண்கள் தினம்; அன்பிற்குரிய ஆண்களுக்கு வாழ்த்து அனுப்ப மெசேஜ்!


மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை, என் தம்பி என்று கூறி வந்தார். மாநாட்டிற்கு பிறகு அவரை விமர்சனம் செய்து வருகிறார். இவரது மாறுபட்ட பேச்சை அனைவரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதேபோல் சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளனர். உடனடியாக கூட்டத்திலிருந்து அவர்களை வெளியேற்றி உள்ளனர். இதனால் அந்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து வெளியேறி உள்ளனர். அவர்கள் அனைவரும் கட்சிக்காக உழைத்தவர்கள். அவர்களுக்கு கருத்தை கூறுவதற்கு கூட இடம் அளிக்கவில்லை. இந்த சர்வாதிகாரப் போக்கை சீமான் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் என்னைப் போன்று கட்சிக்காக உழைத்தவர்கள் தொடர்ச்சியாக கட்சியிலிருந்து வெளியேறுவார்கள் என்று கூறினார்.