ஆரோவில் பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகம் இருப்பதும் அதனை போலீசார் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில், கோட்டகுப்பம் ஜமீத் நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து கஞ்சா விற்ற புதுவை ஆட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் என்ற பாண்டியன் (வயது 22) என்பவரை கோட்டக்குப்பம் காவல் நிலைய போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் பாக்கெட்டுகளில் வைத்திருந்த 9 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் சோலை நகரைச் சேர்ந்த அருண் (22) மற்றும் லாஸ்பேட்டையைச் சேர்ந்த அஜித்குமார் (24) ஆகியோர் தனக்கு கஞ்சா சப்ளை செய்ததாக தெரிவித்தார்.


அதன் அடிப்படையில் அருணையும் அஜித்குமாரையும் கோட்டக்குப்பம் போலீசார் மடக்கி பிடித்தனர். இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை தாம்பரத்தில் கேசவன் என்பவருக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தி அங்கிருந்து அவர் மூலம் புதுவை பேருந்து நிலையத்திற்கு ஒருவர் கஞ்சாவை கிலோ கணக்கில் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள் என்றும் இந்த கஞ்சா பொட்டலங்களை புதுவையிலும் கோட்டக் குப்பம் பகுதியிலும் விற்று வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களி டமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.




புதுவையில் இருந்து சாராயம் கடத்தியவர் கைது :


விழுப்புரம் ரெட்டியார்மில் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் இருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில்  பாண்டிச்சேரியில் இருந்து மில்லி சாராயம் எடுத்து வந்தது தெரியவந்தது. இவர் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த பழனி என்பது தெரியவந்தது. மேலும் அவர் கொண்டு வந்த 10 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.