ஜனவரி 13 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 


முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்


நடப்பாண்டுக்கான தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் இன்று தொடங்கியது. அவர் தன் உரையில் பல வார்த்தைகளை விடுத்து பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் ஆளுநர் உரையை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை தமிழில் மொழிப்பெயர்த்து பேசினார். இதனையடுத்து இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே  ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இதன் பின்னர் ஆளுநர் உரை குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அச்சிடப்பட்ட உரையை முறையாக முழுமையாக ஆளுநர் படிக்கவில்லை என தெரிவித்தார். மேலும் அச்சிட்ட பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெற வேண்டும் என தீர்மானத்தினை முன்மொழிய சட்டப்பேரவையில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 


ஜனவரி 13 ஆம் தேதி வரை நடைபெறும் 


இதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்ன செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, ஜனவரி 13 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தெரிவித்தார். 


மேலும் நாளை சட்டப்பேரவை கூட்டம் கூடியதும் சமீபத்தில் மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும். அதன்பின் 11, 12 ஆம் தேதிகளில் சட்டப்பேரவை முழுமையாக நடைபெறும். 13 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையுடன் கூட்டத்தொடர் முடிவடையும் என அப்பாவு தெரிவித்துள்ளார். 


ஆளுநர் செயல்பாடு வருத்தமளிக்கிறது


“கடந்த ஜனவரி 5 ஆம் தேதி ஆங்கிலத்தில் ஆளுநர் உரை அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டு  7 ஆம் தேதி எங்களுக்கு அனுப்பப்பட்டது.  இன்று ஆளுநர் தனது உரையின் சில பகுதிகளை விட்டு விட்டும், சில பகுதிகளை சேர்த்தும் பேசினார்.  அதனால் அச்சிடப்பட்ட உரையில் இடம்பெற்றிருந்ததை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற வேண்டும் என முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 


அதேபோல் ஆளுநர் தேசிய கீதம் முடிவடைதற்கு முன்பே சென்று விட்டார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர் உரைக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். ஆனால் அவருடைய பெயரைக் கூட ஆளுநர் உச்சரிக்காதது வேதனையாக உள்ளது. மேலும் திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் மாநிலத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 


பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் எதற்காக இப்படி நடந்து கொள்கிறார்கள் என தெரியவில்லை. ஆளுநர் உரை ஜனநாயக மரப்புப்படியே நடக்கிறது. அவர்கள் உரையின் மீது எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல், இப்படி பொதுமேடையில் பேசுவது போன்றுவது பேசினால் சரியா?” என அப்பாவு கேள்வியெழுப்பினார்.


”இந்திய நாடாளுமன்றத்தின் மரபுப்படியே நாம் நடக்கிறோம். மோடி அரசால் நிறைவேற்றப்படுகின்ற சட்டத்திற்கு குடியரசு தலைவர் அடுத்த நொடியே ஒப்புதல் அளிக்கிறார். ஆனால் பாஜக ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து சட்ட தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் இதுவரை எந்த பதிலும் இல்லை. 


எனக்கு ஆளுநர் அவர்களின் செயல்பாடு மனவருத்தம் அளிக்கிறது. ஆளுநராக இருப்பவர்கள் மத்திய அரசை திருப்திபடுத்தினால் பெரிய பதவி கிடைக்குமோ என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. தேசிய கீதத்துக்கு ஆளுநர் மரியாதை கொடுக்காதது இந்த நாட்டை அவமானப்படுத்துவதற்கு சமமானதாகும்” என சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.