Thirumavalavan MP: சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்துகொண்ட விதத்தினைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தினை நடத்தவுள்ளதாக திருமாவளவன் எம்.பி ட்வீட் செய்துள்ளார். 


ஆளுநர் உரை:


2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவைக்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம் என கூறி சட்டப்பேரவையில் தமிழில் தனது உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி. அதில், “சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்.” என பேசினார்.


அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். இதனைத் தொடர்ந்து வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! என்ற பாரதியாரின் பாடலோடும், வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் என்று சொல்லி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முடித்தார். 


பாதியிலே வெளியேறிய ஆளுநர்:


சட்டப்பேரவையில் ஆளுநர் பேசிக்கொண்டு இருந்தபோது, 'தமிழ்நாடு எங்கள் நாடு' என அவருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் முழக்கமிட்டனர். காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக தற்போது முழக்கமிட்டு ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 


ஆளுநர் திராவிட நாடு, திராவிட மாடல், பெரியார், கலைஞர், அண்ணா உள்ளிட்ட பகுதி அடங்கிய பக்கத்தை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் அரசு ஆளுநருக்குப் பேசக் கொடுத்த உரையே அவைக் குறிப்பில் இடம்பெறத் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதைக் கேட்ட ஆளுநர் ரவி, முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது பாதியிலேயே சட்டப் பேரவையில் இருந்து வெளியேறினார்.  ஆளுநரின் செயலைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எம்.பி ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 






ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்.எஸ்.எஸ். முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி, ஜனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.