விழுப்புரத்தில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவி தன்னால் மேற்படிப்பு தொடர முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டு கல்லூரி படிப்பினை தொடர பெற்றோர்கள் கூறியதால் திருமணத்தில் விருப்பம் இல்லாத மாணவி தன்னால் படிக்க முடியவில்லை என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவியின் பெற்றோர் விவசாய கூலி மற்றும் செங்கல் சூளையில் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். முதல் இரண்டு பிள்ளைகளும் கல்லூரி முடித்துவிட்டு வேலை செய்து வருகின்றனர். மூன்றாவதாக இருக்கும் மகள், அரசு பள்ளியில் 12ஆம் படித்து முடித்துள்ளார். இதனிடையே மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்த மகளை மேற்கொண்டு படிக்க வைக்க முடியாத சூழலில் பெற்றோர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடும்ப பொருளாதார சூழலும் அதற்கு காரணமாக இருந்துள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் பெண்ணிற்கு திருமண ஏற்பாடு பெற்றோர் செய்துள்ளனர். குறிப்பாக திருமணம் செய்து கொண்டு மேல்படிப்பைத் தொடர பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் திருமணத்தில் விருப்பம் இல்லாத அவர் தன்னால் மேற்படிப்பு படிக்க முடியவில்லை என்ற மன வேதனையில் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், உயிரிழந்த மாணவி 12ஆம் வகுப்பில் 411 மதிப்பெண் பெற்று சிறப்பாக படித்துள்ளார்.
அவரை மேற்கொண்டு கல்லூரி படிப்பு படிக்க வைப்பதாக பெற்றோர் கூறியிருக்கின்றனர். இதற்கிடையே குடும்ப பொருளாதார சூழல் காரணமாக படிப்பை தொடர முடியாமல் மகளை திருமணம் செய்து வைக்கலாம் என்று அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். தற்போது திருமணம் செய்து கொள்வது மகளுக்கு பிடிக்கவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த பெண் அவர்களுக்கு சொந்தமான நிலத்தின் அருகே இருக்கும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
மாணவிக்கு சொந்தமான கிணற்றில் நேற்று இரவு 7.30 மணியளவில் விழுந்துள்ளார். அவரை காணவில்லை என்று தேடிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். பின்னர் அவர்களது கிணற்றில் 10 மணிக்கு மேல் முழுவதுமாக தண்ணீர் எடுத்து அதிகாலை 3.30 மணிக்கு பார்த்த போது மகள் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது என தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உடலை உடற்கூராய்வு செய்ய உறவினர்கள் மற்றும் ஊரார்கள் மறுப்பு தெரிவித்து வருவதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்