டாஸ்க் முடித்தால் அதிக லாபம்


விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நெல்சன் மகன் சாம்ராஜ்பிரபு 34. இவர் அரசு பள்ளி ஆசிரியர். இவரின் செல்போனுக்கு கடந்த 27ம் தேதி டெலிகிராம் ஐ.டி., மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், பகுதிநேர பணியாக அவர் அனுப்பும் லிங்கிற்குள் சென்று சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி, ஒரு லிங்கை அனுப்பினார்.


3 லட்சத்து 4 ஆயிரம் மோசடி 


இதை நம்பி, சாம்ராஜ்பிரபு அந்த லிங்கிற்குள் சென்று தனக்கான யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு உருவாக்கிய பின், மர்ம நபர் கூறிய டாஸ்கை முடித்து ரூ.10 ஆயிரம் செலுத்தி, ரூ.20,484 மற்றும் ரூ.13,500 செலுத்தி ரூ.32,846 பெற்றார். தொடர்ந்து சாம்ராஜ்பிரபு கடந்த 30ம் தேதி தனது வங்கி கணக்கோடு இணைக்கப்பட்ட பேடிஎம் அப் மூலம் மொத்தம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 100 ரூபாய் செலுத்தி டாஸ்க் முடித்தார். பின், அவருக்கு சேர வேண்டிய தொகை வராமலிருந்த போது, மர்ம நபர் மேலும் பணம் கேட்டார். அப்போது தான் சாம்ராஜ்பிரபுவிற்கு தான் பணம் இழந்த விஷயம் தெரியவந்துள்ளது.அவர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


அறிமுகம் இல்லாத நபர்களிடம் பொதுமக்கள் தங்களுடைய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விவரங்கள், ஓ.டி.பி., சி.வி.வி., காலாவதியான தேதி எண்கள் போன்றவற்றை பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை என வரும் போலி லிங்க் விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். Fake Loan App களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கடன்பெற வேண்டாம். நேப்டல், மீசோ பரிசு விழுந்துள்ளதாக வரும் தபால் கூப்பன்களை பார்த்து ஏமாறாதீர்கள்.


(QR Code) ஸ்கேன்


டெலிகிராம், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளத்தை பயன்படுத்தி வாகனங்களை வாங்க வேண்டாம். ராணுவ பழைய வாகனங்கள் விற்பனை என வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். பிரபல முதலீட்டு நிறுவனத்தின் பெயரை கூறி பொய்யான முதலீடு செய்யச் சொல்லி தொலைபேசி மூலம் அழைத்து பணம் செலுத்தக்கூறினால் முதலீடு செய்து ஏமாறாதீர்கள். அறிமுகம் இல்லாத நபர், வாட்ஸ்-அப், டெலிகிராம் மூலம் அனுப்பும் கியூஆர் கோடை (QR Code) ஸ்கேன் செய்யாதீர்கள். இது முற்றிலும் மோசடியானது. இலவச வைபை வசதிகளை பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்குடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளை தவிர்த்து விடுங்கள்.


கிரெடிட் கார்டு போனஸ் பாயிண்ட்


வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்களுடைய விவரங்களை யாரேனும் கேட்டால் அதனை நம்பி ஏமாற வேண்டாம். கிரெடிட் கார்டு போனஸ் பாயிண்ட் ரீடம் செய்து தருவதாக கூறி போன் அழைப்பு வந்தால் அதை நம்பி ஏமாற வேண்டாம். ட்ரூ காலர் செயலியை உங்களது ஜிபே, போன்பே உள்ள செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். தேவையற்ற செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.மேலும் பொதுமக்கள் தங்களது செல்போனில் உள்ள புரோபைல் டிபியில் தங்களுடைய புகைப்படத்தை வைக்க வேண்டாம். உங்களுடைய புகைப்படத்தை யாரேனும் பயன்படுத்தி மார்பிங் செய்து பணம் பறிக்கக்கூடும். இன்ஸ்டாகிராம் ஐ.எம்.ஓ. போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்தி அறிமுகம் இல்லாத நபர்களிடம் தகவல்களை பரிமாற்றம் செய்யக்கூடாது. முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைத்தளங்கள் மூலம் உங்களுக்கு தெரிந்த நபர்களின் வங்கி கணக்கு எண்ணில் பண உதவி கேட்டு வரும் செய்திகளை கேட்டு நம்பி பண உதவி செய்து ஏமாற வேண்டாம்.


அரசு வெப்சைட் போல 12 ஆயிரம் போலியான வெப்சைட்டுகள்


ஏ.டி.எம்.  (ATM Card ) அட்டையை பயன்படுத்தும் போது அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஏ.டி.எம். அட்டை பின் எண்ணை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கொடுக்கக்கூடாது. ஏ.டி.எம். அட்டை (ATM Card ) பண பரிவர்த்தனை முடிந்தவுடன் கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும். பாஸ்வேர்டு, ஓ.டி.பி.யை யாரிடமும் பகிர வேண்டாம். ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு நிறுவனங்களை நம்பி முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். கூகுள் சர்ச் தளத்தில் வாடிக்கையாளர் சேவை, அரசு வெப்சைட் போல 12 ஆயிரம் போலியான வெப்சைட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதை தவறுதலாக பயன்படுத்தி ஏமாற வேண்டாம். மின் கட்டணம் செலுத்துமாறு வரும் போலி லிங்க் மூலம் நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.


மல்டிமீடியா மார்க்கெட்டிங்


மல்டிமீடியா மார்க்கெட்டிங் என வரும் போலி லிங்க்கை நம்பி பணம் செலுத்தி ஏமாறாதீர்கள். மொத்த வியாபாரத்திற்கு குறைந்த விலையில் புளி, வெங்காயம், பூண்டு கிடைக்கும் என வரும் போலி லிங்கை நம்பி பணம் செலுத்த வேண்டாம். மேற்கண்ட குற்றங்கள் ஏதேனும் நடந்திருந்தால் https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. இணையதளம் மூலம் பணம் இழப்பு ஏற்படும்பட்சத்தில் 1930 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது