விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஊறுகாய் கம்பெனி மேலாளரின் காரை வழிமறித்து கத்தி முனையில் 30 இலட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.



சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த சார்வாய்புதூர் பகுதியில் முகமதுஜுன்னா(37) என்பவர் ஊறுகாய் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் மேலாளராக அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா(30), என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி காலை தலைவாசலில் இருந்து ராஜா மற்றும் அதே பகுதியை சேர்ந்த கேசியர் நிதி சக்கரவர்த்தி(28), கார் ஓட்டுனர் மணக்காடு பகுதியை சேர்ந்த ராஜி மகன் கிருஷ்ணன்(24), ஆகியோர் மரக்காணம், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளரிப்பிஞ்சு வாங்கி ஊறுகாய் தயாரிப்பதற்காக 30 லட்சம் ரூபாய் காரில் எடுத்துக்கொண்டு பெருமுக்கல் அருகே உள்ள பண்ணையில் விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றனர்.





அப்போது பெருமுக்கல் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 8 மர்ம நபர்கள் காரை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் 8 பேரும் காரின் கண்ணாடிகளை உடைத்து ராஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து பையில் வைத்திருந்த 30 லட்சம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி ஸ்ரீ நாதா, ஏஎஸ்பி அபிஷேக் குப்தா, பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.




 


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சார்வாய் புதூர் கிராமத்திலிருந்து 30 லட்சம் ரூபாய் காரில் எடுத்துச் செல்லப்படுவதாக முக்கிய குற்றவாளிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார் உட்பட 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 12லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைதான 4 பேரிடம் மேற்கொண்ட விசாரணையில் வழக்கின் முக்கிய குற்றவாளிகளை 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.


இதில் திண்டிவனம் மரக்காணம் சாலை சிறுவாடி பேருந்து நிறுத்தம் அருகே பிரம்மதேசம் ஆய்வாளர் சீனிபாபு மற்றும் உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மேலும் இரண்டு முக்கிய குற்றவாளிகளை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மீதமுள்ள 5 முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.




இந்நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் பிரம்மதேசம் ஆய்வாளர் சீனிபாபு தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாமல் சென்ற காரை நிறுத்த முயன்றனர். அப்போது அதில் வந்த மூன்று நபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக மேம்பாலத்தின் மேலிருந்து கீழே குதித்தனர். இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவர்களிடம் செய்த விசாரணையில் சென்னை பொலிச்சனூர் பகுதியை சேர்ந்த கோயில்ராஜ் மகன் சஜித்(28), செங்கல்பட்டு நாவல் நெடுஞ்செழியன் நகரை சேர்ந்த குமார் மகன் அசோக்(26) மற்றும் செங்கல்பட்டு ஊரப்பாக்கத்தை சேர்ந்த வாசு மகன் அரவிந்த்(27) என்பதும் இவர்கள்


பெருமுக்கல் பேருந்து நிறுத்தத்தில் காரை வழிமறித்து கத்தி முனையில் 30 லட்சம் ரூபாயை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.  அவர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 3 பைக், கார், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுவரை கைதானவர்களிடம் இருந்து 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.