விழுப்புரம்: கிளியனூர் அருகே மூதாட்டியிடம் தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி நூதன முறையில் 5 சவரன் நகைகளை எடுத்து சென்ற இரு இளைஞர்களை கிளியனூர் போலீசார் கைது செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம்  கிளியனூர் அடுத்த கொஞ்சுமங்கலம், கெங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மூதாட்டியான வசந்தா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வசந்தாவிடம், தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டுத்  தருவதாகத் கூறியுள்ளனர். இதை நம்பிய வசந்தா, தனது வீட்டில் வைத்திருந்த  ஐந்து  சவரன் நகைகளை அந்த நபர்களிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து, அந்த நபர்கள்  நகைகளை ஒரு டப்பாவில் போட்டு பாலிஷ் போடுவதாகக்கூறி, மூதாட்டியிடம் இருந்து ஐந்து சவரன் நகைகளை  திருடிச்சென்றனர்.


இதுகுறித்து வசந்தா, கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகைகளை ஏமாற்றி சென்ற இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், கிளியனூர் சந்திப்பில் காவல் ஆய்வாளர் பாலமுரளி மற்றும் உதவி ஆய்வளர்கள் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி சோதனை செய்தனர். அதில் முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறவே அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷியாம் மற்றும் மணிஷ்குமார் என்பதும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூதாட்டி வசந்தாவிடம் ஏமாற்றி, 5 சவரன் நகைகளை திருடியதும் தெரிய வந்தது.


மேலும், விசாரணையில் இருவரும், திருவண்ணாமலையில் தங்கி, கிராமப்புறங்களுக்கு சென்று தனியாக இருக்கும் மூதாட்டிகளை ஏமாற்றி, நகைகளை திருடி வருவதும், இவர்கள் மீது திருவண்ணாமலை பகுதியில் 2 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்து, நான்கரை சவரன் நகை மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.