இரு ஆண்டுகளுக்கு முன்னால் வேலை கிடைக்காத மாணவர்கள் 19 சதவீதமாக இருந்த நிலையில், இப்போது இரு மடங்கு அதிகரித்துள்ளனர்.


நாடு முழுவதும் கல்லூரிப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில், 8 ஆயிரம் ஐஐடி பட்டதாரிகளுக்கு இந்த ஆண்டு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல மாணவர்கள் பெறும் ஆண்டு சராசரி ஊதியமும் கணிசமாகக் குறைந்துள்ளது. ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவர் தீரஜ் சிங்கின் ஆர்டிஐ கேள்விக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐஐடியில் படிப்பது என்பது பெரும்பாலான மாணவர்களின் வாழ்நாள் கனவாக இருக்கிறது. வாய்ப்பு கிடைக்காமல் நிறையப் பேருக்கு கனவாகவும் மாறி விடுகிறது. மதிப்பு வாய்ந்த கல்வி நிறுவனமான ஐஐடிக்களில் படிக்கும் மாணவர்களுக்கு லட்சங்களில் மாத ஊதியங்கள் வழங்கப்படுகின்றன. ஃப்ரெஷ்ஷருக்கே ஆண்டு ஊதியம் கோடியைத் தொடும் சம்பவங்களும் இங்கு நடப்பதுண்டு.


இந்த நிலையில், 2023- 24ஆம் கல்வி ஆண்டில் இதுவரை வளாக நேர்காணலில் தேர்வாகாமல், 38 சதவீதம் அதாவது 8 ஆயிரம் ஐஐடி மாணவர்கள் காத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்னால் வேலை கிடைக்காத மாணவர்கள் 19 சதவீதமாக இருந்த நிலையில், இப்போது இரு மடங்கு அதிகரித்துள்ளனர்.


இதுகுறித்து ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவர் தீரஜ் சிங், தன்னுடைய லிங்க்டுஇன் பக்கத்தில் இதுகுறித்துத் தெரிவித்து உள்ளதாவது:


38% பேருக்கு வேலையில்லை


’’நாடு முழுவதும் 23 ஐஐடிக்கள் செயல்பட்டு வரும் நிலையில், 21 ஆயிரத்து 500 பேர் வளாக நேர்காணலில் கலந்துகொள்ள விண்ணப்பித்துள்ளனர். இதில், 13,410 பேர் வேலைக்குத் தேர்வாகி உள்ளனர். இன்னும் 8,090 பேர் வேலைக்கு இன்னும் தேர்வாகவில்லை. அதாவது 38 சதவீத ஐஐடி மாணவர்களுக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை.


இதில் 9 பாரம்பரிய ஐஐடி நிறுவனங்களில், 16 ஆயிரத்து 400 பேர் வளாக நேர்காணலில் கலந்துகொள்ள விண்ணப்பித்துள்ளனர். இதில், 10,310 பேர் வேலைக்குத் தேர்வாகி உள்ளனர். இன்னும் 6,050 பேர் வேலைக்கு இன்னும் தேர்வாகவில்லை. அதாவது 37 சதவீத பாரம்பரிய ஐஐடி மாணவர்களுக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை.


2 ஆண்டுகளில் 2.1 மடங்கு அதிகரிப்பு


அதேபோல 14 புதிய ஐஐடி நிறுவனங்களில், 5,100 மாணவர்கள் வளாக நேர்காணலுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் 3,100 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ள நிலையில், 2,040 பேருக்கு இன்னும் கிடைக்கவில்லை. அதாவது புது ஐஐடிகளில் படிக்கும் 40 சதவீதம் மாணவர்களுக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை. இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2.1 மடங்கு அதிகரித்துள்ளது’’.


இவ்வாறு தீரஜ் சிங் தெரிவித்துள்ளார்.


ஐஐடி மாணவர்களுக்கே இன்னும் வேலை கிடைக்காமல் இருப்பதாக வெளியான தகவல், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.