விழுப்புரம்: திண்டிவனம் அருகே 2019ம் ஆண்டு மிட்டாய் கொடுத்து இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததில் ஒரு சிறுமி உயிரிழந்த வழக்கில் 15 பேருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தென்நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் கோமதி. தனது தாய் மாமனை திருமணம் செய்து கொண்டார். இதில் 9 வயது, 7 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து  புதுச்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து தனியாக தனது இரு பெண் குழந்தைகளுடன் இருந்து வந்துள்ளார். புதுச்சேரியில் வேலை செய்யும்போது அவருடன் வேலை செய்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நபருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.


இதனால் தனது இரு குழந்தைகளையும் தென் நெற்குனத்தில் உள்ள தனது தாய் பழனியம்மாள் வீட்டில் அவரது பராமரிப்பில் விட்டுவிட்டு, புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த கோமதி கிராமத்தில் உள்ள தனது குழந்தைகளை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது இரு சிறுமிகளும் தனது தாயிடம் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவங்களை கூறி அழுதுள்ளனர்.


இதனால் தனது இரு குழந்தைகளையும் தன்னுடனேயே புதுச்சேரி அழைத்து வந்துள்ளார். அங்குள்ள கதிர்காமம் அரசு பள்ளியில் இரு குழந்தைகளையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் தனது 7 வயது சிறுமியை தாய் கோமதி வீட்டில் கண்டித்து அடித்துள்ளார். இதன் காரணமாக சிறுமியின் கன்னம், கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.


பள்ளிக்கு சென்ற சிறுமியை கண்ட ஆசிரியர் விசாரித்துள்ளனர். அதற்கு தனது தாய் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆசிரியர் சிறுமியின் தாய் கோமதியை பள்ளிக்கு வரவழைத்து சிறுமிக்கு சிகிச்சை அளித்து அதற்குரிய சான்றிதழை என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி அனுப்பி உள்ளார். இதனை அடுத்து அங்குள்ள மருத்துவமனையில் குழந்தைக்கு வயிற்றுவலி இருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திருப்பியுள்ளதாக தெரிகிறது. இதில் திருப்தி அடையாத ஆசிரியர் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் தகவல் அளித்துள்ளார்.


இதனை தொடர்ந்து அங்குள்ள நிர்வாகிகள் கோமதியின் வீட்டிற்கு வந்து குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு இரு சிறுமிகளுக்கும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாலியல் தொந்தரவு காரணமாக உடலில் பல இடங்களில் காயம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 


இதனைத் தொடர்ந்து இரண்டு சிறுமிகளையும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஏழு வயது சிறுமியை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் 7 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இதுகுறித்து சிறுமியின் தாயார் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் பிரம்மதேசம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த இரண்டு சிறுமிகளுக்கும் மிட்டாய் வாங்கி தந்து சிறுமியின் தாய் மாமா கஜேந்திரன், தாத்தா துரைசாமி மற்றும் உறவினர்களான தீனதயாளன், அஜித்குமார், பிரபாகரன் உள்ளிட்ட 15 பேர் தொடர்ச்சியாக 5 மாதங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் உள்ளிட்ட 15 பேரை கைது செய்து பிரம்மதேசம் போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 15 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.32 ஆயிரம் அபராதமும் விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வினோதா தீர்ப்பளித்தார். இதனையடுத்து 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரையும் கடலூர் மத்திய சிறையில் அடைப்பதற்கான பணிகளை போலீஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.