விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசு வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டித் தராமல் ஏமாற்றி வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் வீட்டிற்கு பணம் மற்றும் சிமெண்ட் மூட்டை கேட்க சென்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களை பிளாஸ்டிக் பைப் கொண்டு கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட தடுத்தா கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள்  மணிவாசகம் பாண்டியராஜன் இருவரும் சகோதரர்கள் இவர்கள் அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் அரசாணை வழங்கப்பட்டது. போதிய வசதி இல்லாத காரணத்தால் சொந்தமாக பணம் முதலீடு செய்து வீடு கட்ட முடியாமல் மாதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அரசு வீடு கட்டும் ஒப்பந்ததாரர் சங்கர் என்பவரிடம் வீடு கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.


குறிப்பிட்ட நேரத்திற்கு வீடு கட்டாமல் பேஸ்மட்டம் வரை அமைத்துவிட்டு முதல் தவணையாக பணத்தை சங்கர் எடுத்துக் கொண்டதாகவும் வீடு கட்டாமல் இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டாவது தவனையாக 30 மூட்டை சிமெண்ட் வழங்கப்பட்ட நிலையில் அதுவும் திருப்பி தராமல் ஏமாற்றியதாக தெரிகிறது.


இதை அறிந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரும் மாதம்பட்டு கிராமத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சங்கர் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஷங்கர் பிளாஸ்டிக் பைப்பை கொண்டு என்னையே திட்டுகிறாயா என்று கூறி கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மணிவாசகம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்  மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிகிறது. இது போன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.