ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி  இயக்கத்தில் உருவாகி வரும் படம் “அமரன்”. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  மற்றும் படத்தின் டீசர் ஆகியவை சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. இப்படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது. 


இப்படத்தின் டீசருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.  படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்காக போராடுகின்ற இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கூறி அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக போராட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேரை தமிழ்நாடு காவல் துறை கைது செய்தது. 


கமல், சிவகார்த்திகேயன் உருவ பொம்பை எரிப்பு 


காஷ்மீர் மக்கள், சிறுவர்கள் உட்பட இந்திய ராணுவத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதைப் போலவும், தீவிரவாத செயலில் ஈடுபடுவதைப் போலவும், சிறுவர்கள் கல்லெறிந்து வன்முறையில் ஈடுபடும் காட்சிகள் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளன.


காஷ்மீர் மக்களின் தேசிய இன உரிமைக்காக நடத்தப்படும் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் முத்திரை குத்தும் இழிவான செயலை கண்டித்தும் தமிழக அரசு உடனடியாக அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் நடிகர்கள் கமலஹாசன், சிவகார்த்திகேயனையும் கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்பகோணத்தில் உருவ பொம்மையை விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியினர் எரித்தனர்.  


இந்நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 22ஆம் தேதி தஞ்சை ஆற்றுப்பாலத்தில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியினர் கமல், சிவகார்த்திகேயன் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில் 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.