விழுப்புரத்தில் 13 வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டபோது போலீசாரிடம் சிக்கினார்.  விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன் மகன் அறிவு என்கிற அறிவழகன் (36). பிரபல ரவுடியான இவர் மீது கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள், 2 நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்குகள், 9 வழிப்பறி கொள்ளை வழக்குகள், 3 தகராறு வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் உள்ளன.


இவற்றில் 13 வழக்குகளில் கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ரவுடி அறிவழகனை விழுப்புரம் போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று விழுப்புரத்தை அடுத்த கண்டமங்கலத்தில் உள்ள வள்ளலார் அரசு பள்ளி அருகே கண்டமங்கலம் காவல் ஆய்வாளர் ரத்தின சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


 



அப்போது அங்கு கண்டாச்சிபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான சபாபதி (35) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக புதுச்சேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து விழுப்புரம் திரும்பிய போது அவரை ரவுடி அறிவழகன் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். இதைபார்த்த போலீசார் உடனே அறிவழகனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அறிவழகனை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





கடந்த 21-04-2015 அன்று காலை விழுப்புரம் நகராட்சி பூங்காவில் இறகுப்பந்து விளையாடிக் கொண்டிருந்த விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையை சேர்ந்த ரவுடி பத்தர் செல்வத்தை முன்விரோதம் காரணமாக அறிவழகன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததோடு பத்தர்செல்வத்தின் தலையை மட்டும் துண்டித்து அதை எடுத்துக்கொண்டு நடந்தே விழுப்புரம் காந்தி சிலை வரை சென்று அங்கு அந்த தலையை கீழேபோட்டு அதனை கால்பந்து உதைப்பது போல் உதைத்துவிட்டு அருகில் உள்ள நகர காவல் நிலையத்தில் சரணடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர