விழுப்புரம் : கண்டமங்கலம் அருகே மனைவியிடம் மதுபோதையில் கணவர் சண்டையிட்டு, கரும்பு காட்டில் வைத்து மனைவியின் கழுத்தை அறுத்து கணவரே கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 


மனைவியிடம் மதுபோதையில் கணவர் சண்டை


விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள நவமால்காப்பேர் பகுதியை சார்ந்த பாண்டியன்- மலர் தம்பதியினர் தனது நான்கு மகன்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு தனி குடுத்தனமாக நவமால்காப்பேர் பகுதியில் வசித்து வருகின்றனர். பாண்டியன் மது போதைக்கு அடிமையானதால் அடிக்கடி மது அருந்தி விட்டு மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.


இந்நிலையில் நேற்றைய தினம் மனைவியிடம் சண்டையிட்டு வீட்டில் உறங்கிய பாண்டியன் மீண்டும் காலையில் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். கணவனிடம் சண்டையிட்டு விட்டு வழக்கம்போல் நவமால் காப்பேர் பகுதியிலுள்ள கரும்பு தோட்டத்திற்கு காலை பணிக்கு சென்றுள்ளார்.


கத்தியால் கழுத்தை அறுத்து கொலை


பணியை முடித்துவிட்டு நண்பகலில் கரும்பு தோட்டத்திற்குள் இருந்து கிளம்பும் போது மலரின் கணவர் மலரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். அதன் பிறகு மாலை நேரத்தில் கரும்பு தோட்ட உரிமையாளர் கரும்பு தோட்டத்திற்கு சென்றபோது கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மலர் இறந்து கிடந்தையடுத்து பார்த்து அதிர்ச்சியடைந்து, அருகிலுள்ள கண்டமங்கலம் காவல நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.


அந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து கொலை செய்த பாண்டியனை தேடிவருகின்றனர். கணவனே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.