விழுப்புரம்: மரக்காணம் அருகே முன் விரோதம் காரணமாக சகோதரர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

அத்துமீறி வீட்டில் உள்ளே நுழைந்தவர் மீது புகார்


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ் புத்துப்பட்டு ஊராட்சியை சேர்ந்த நம்பிக்கை நல்லூர் மீனவ கிராமம் உள்ளது. அங்கு வசித்து வரும் புகழேந்தி (48) மீனவரான இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திவினா (27) என்பவர் வீட்டிற்குள் கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி அத்துமீறி வீட்டில் உள்ளே நுழைந்ததாக கூறி திவினா கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். திவினா அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்தில விசாரணை செய்த போது புகழேந்தி என்பர் போலீசாரிடம் மன்னிப்பு கோரியதை அடுத்து இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாக கூறியதால் இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர் 


பீர் பாட்டிலில் பெட்ரோலை நிறப்பி தீ பற்ற வைத்து வீட்டின் மீது வீச்சு


இந்த நிலையில், சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த திவினாவின் கணவர் சுரேந்தர் (35) கடந்த 13ம் தேதி சிங்கப்பூரிலிருந்து வீட்டிற்கு வந்தவர் நடந்த சம்பவங்களை கேட்டு அன்றே ஆவேசத்தில் நேராக புகழேந்தி வீட்டிற்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது புகழேந்தி மனைவி ஜோதி தடுத்த போது அவரை கீழே பிடித்து தள்ளி விட்டுள்ளார். மீண்டும் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இருதரப்பினரும் கடந்த 14ம் தேதி கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


புகாரின் பேரில் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் புகழேந்தியின் மூன்றாவது மகன் மதன் (21) ஏசி மெக்கானிக்கான அவர் இன்று அதிகாலை 01.45 மணி அளவில் 2 பீர் பாட்டிலில் பெட்ரோலை நிறப்பி தீ பற்ற வைத்து சுரேந்தர் மற்றும் அருகில் உள்ள அவரது தம்பி சுமன் ஆகியோரது வீட்டின் மீது தனித்தனியாக வீசி விட்டு ஒடி உள்ளார்.


பயங்கர சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்ததில் சுரேந்தர் வீட்டு வாசலில் உள்ள பொருட்கள் எரிந்த நிலையில் அவரது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டரில் தீ பற்ற முயன்ற போது உடனடியாக தீயை அணைத்தனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் பக்கத்தில் உள்ள சுமன் வீட்டின் பிரதான முன்பக்க வாசல் பாதி எரிந்தது மற்றும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் மற்றும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த துணிகள் எறிந்து சாம்பலாகியது, தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.


தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற கோட்டகுப்பம் காவல் நிலைய போலீசார் புகழேந்தி, மற்றும் அவரது மகன்களான பூவரசன், மாதவன், ஆகிய மூன்று பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசிய புகழேந்தியின் மூன்றாவது மகன் மதன் என்பவரை கோட்டக்குப்பம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் பெட்ரோல் குண்டு விசப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சமபவம் சமிப காலமாக அதிகரித்து வருகிறது.