மயிலாடுதுறை அருகே சொத்துக்காக மகனுடன் சேர்ந்து மனைவியை குத்திக் கொலை செய்த கணவன் மற்றும் மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
கொலையான தாய்
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே கிடாத்தலைமேடு கிராமம் சன்னதி தெருவை சேர்ந்தவர் சபாபதி என்பவரது மகன் 87 வயதான சுப்பிரமணியம். இவரது மனைவி செல்லம்மாள். செல்லம்மாள் தனது கணவர் சுப்பிரமணியன் இருவருக்கும் சொத்து பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் செல்லம்மாவை பிரிந்து சுப்பிரமணியன் வெளியூர் சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து, பூர்விக சொத்துகளைக் கொண்டு பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளார் செல்லம்மாள்.
சொத்து பாகப்பிரிவினை பிரச்சினை
இந்நிலையில் கடந்த 2016 -ஆம் ஆண்டு இவரிடம் சொத்து குறித்து இவரது கணவர் சுப்பிரமணியன் மற்றும் இவரது இளைய மகன் ராமலிங்கம் ஆகியோர் பிரச்சனை செய்து வந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து 2016 -ஆம் ஆண்டு கிடாத்தலைமேடு கிராமத்தில் இருந்த செல்லம்மாளை, செல்லம்மாளின் கணவர் சுப்பிரமணியன் பிடித்துக் கொள்ள, அவரது பெற்ற மகனான ராமலிங்கம் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை வழக்கு பதிவு
இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த செல்லம்மாளின் மூத்த மகன் நடனசபாபதி என்பவர் மணல்மேடு காவல்நிலையம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மணல்மேடு காவல் நிலையத்தில் கொலை குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த வழக்கில் அப்போதைய மணல்மேடு காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம் விசாரணை மேற்கொண்டு, கொலை வழக்கில தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
ஆயுள் தண்டனை விதிப்பு
இந்த கொலை வழக்கின் விசாரணையானது மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணை நிறைவடைந்து வழக்கின் தீர்ப்பானது நேற்று மாலை 17.12.2024-ம் தேதி வழங்கப்பட்டது. இவ்வழக்கினை விசாரித்த அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி இவ்வழக்கின் குற்றவாளிகளான செல்லம்மாவின் கணவர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் 58 வயதான ராமலிங்கம் ஆகியோரை குற்றவாளிகள் என தீர்மானித்து, குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறைதண்டனை விதித்து மேலும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
எஸ்.பி.பாராட்டு
இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராம.சேயோன் ஆஜராகி வாதாடி, வழக்கினை தண்டனையில் முடிக்க சிறப்பாக பணியாற்றியதாக அரசு வழக்கறிஞர் ராம.சேயோன், மணல்மேடு காவல் நிலைய ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நீதிமன்ற அலுவலாற்றிய முதல் நிலை காவலர் பாரதிராஜா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்.