மயிலம் அருகே செயல்பட்டு வரும் அரசு துவக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கூறியும், அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் பெற்றோர் ஒருவர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேயுள்ள நெடிமோழியனூரில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக அருள்மொழி வர்மன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். தலைமை ஆசிரியராக உள்ள அருள்மொழி வர்மன் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் தகாத முறையில் அங்கங்களை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுடிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட 5 ஆம் வகுப்பு மாணவி மூன்று தினங்களுக்கு முன் தலைமை ஆசிரியர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை பெற்றோரிடத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், பெரியதச்சூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். எனினும் போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர்கள் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், பெற்றோர்களிடம் ஆசிரியர் மீது வழக்கு தொடர்வதால் உங்களது குழந்தையின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் எனக்கூறி புகாரைத் திரும்ப பெற வைத்துள்ளார் இதே போன்று பல்வேறு மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்து நிலையில் அங்கு பயிலும் பெண் குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகத் தகவல் வெளியானது.
இதனால் தலைமை ஆசிரியர் மீது சமூக நலத்துறை மூலமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்ககோரி அப்பள்ளியின் பெற்றோர் தரப்பில் தமிழ் தென்றல் என்பவர் இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரினை பெற்று கொண்ட ஆட்சியர் பழனி இது தொடர்பாக உரிய விசாரனை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், பெற்றோர் தரப்பில் புகார் அளித்துள்ள தமிழ் தென்றல் உடன் ஆசிரியரை காப்பாற்றும் நோக்கில் பேசிய ஆடியோவும் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.