அன்றைய காலத்து கொத்தடிமைத்தனம், குழந்தை தொழிலாளர்களின் அவலங்கள் என சமுதாயத்தில் தொடர்ந்து வந்த கொடுமைகளை தோலுரிக்கும் வகையில் அந்த காலத்தை கண்முன்னே கொண்டு வந்து அதில் அழகான காதல் கதையையும் இணைத்த புதுமையான ஒரு படைப்பு தான் ஏ.சற்குணத்தின் "வாகை சூட வா". இந்த தேசிய விருது அங்கீகாரம் பெற்ற திரைப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


கிராமத்து பின்னணி :


களவாணி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் சற்குணத்திடம் இருந்து வந்த இரண்டாவது படைப்பு அதே போல கிராமத்தின் பின்னணியில் அமைந்து இருந்தாலும் சற்று காமெடியுடன் சீரியஸான ஒரு விஷயத்தையும் படத்தின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 



வாத்தியாக விமல் :


மகனை எப்படியாவது அரசாங்க உத்தியோகத்தில் சேர்த்துவிட வேண்டும் என வைராக்கியத்துடன் துடிக்கும் பாக்யராஜ் நடிப்பு கச்சிதம். அதற்கு முன்னர் வாத்தியார் உத்தியோகம் கிடைக்க காத்திருப்பு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என பொட்டல் கிராமத்துக்கு வேலைக்கு செல்லும் நாயகன் விமலுக்கு தெரியாது அந்த கிராமத்தில் அவனுக்கு ஏராளமான ஆச்சரியங்களும் அதிர்ச்சியும் காத்துகொண்டு இருக்கிறது என்பது.


கிராமத்து சிறார்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க விமல் படும் பாடு மிகவும் யதார்த்தமாக அமைந்தது. அவரின் நடை, உடை, பாவனை, பேச்சு என அனைத்துமே கச்சிதமாக பொருந்தி இருந்தது. 


யதார்த்த நடிப்பு :


டீக்கடை நடத்தி வரும் நாயகி இனியாவுக்கு, வாத்தியார் மேல் ஒரு ஈர்ப்பு. விமல் அந்த ஊர்காரர்களிடமும், சிறுவர்களிடமும் மாட்டி கொண்டு முழிக்கும்  இடங்கள் கலகலப்பு.  ஆரம்பத்தில் விமலை ஏமாற்றுவதும் காதல் மலர்ந்த பிறகு ஒரே கறி சோறு விருந்து படைத்து அசத்தி விடும் இடங்களிலும் நடிப்பில் மிஞ்சிவிட்டார். தம்பி ராமையா, பொன்வண்ணன், நம்பிராஜன், குமரவேல் என அனைவரும் அவரவரின் பங்கை வெகு சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். 



ஸ்கோர் செய்த இசை :


படத்திற்கு மேலும் அழகு சேர்த்தது அந்த காலகட்டத்து செங்கல் சூளை, பொட்டல் காடு மற்றும் வெள்ளந்தியான சிறுவர்கள். ஜிப்ரானின் இசையும், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் கலை இயக்குநர் சீனு பங்களிப்பும் தாராளமாக இருந்தது. கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் சர சர சார காத்து வீசும் போது... பாடல் ஜிப்ரானுக்கும், பாடகி சின்மயிக்கும் விசிட்டிங் கார்டாக அமைந்தன.   


இந்த தரமான தமிழ் திரைப்படம் ஏராளமான விருதுகளை சூடிக்கொண்டு அழகு சேர்த்ததும் ரசிகர்களின் மனதில் நீங்காத இரு இடத்தில் குடிகொண்டதும்தான் இப்படத்தை 12 ஆண்டுகளை கடந்த பின்பும் கொண்டாட செய்துள்ளது.


நிறைவான கதைக்களம் :


முதலில் விமலுடன் இருந்து எஸ்கேப்பான சிறுவர்கள் கடைசியில் அவருக்காக எங்கும் இடங்களிலும் கண்ணீரை வரவழைத்தனர். படிப்பறிவு இல்லாத பாமர கூட்டத்தில் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திய  விமலின் முயற்சி பலன் பெற்றதா என்பதுதான் வாயை சூடவா  படத்தின் கதைக்களம். 


'களவாணி' படம் மூலம் குறும்புத்தனமான இளைஞர்களும், மென்மையான காதலும், பச்சைப்பசேல் புல்வெளியும் அழகு என்றால் வறண்ட பூமி, சீரியஸ் சப்ஜெக்ட், கதையோடு ஒன்றிப்போகும் கலகலப்பு, அறுபதுகளின் காலகட்டத்தை 'வாகை சூட வா' படத்தின் படத்தின் மூலம் கொண்டு வந்து இருந்தார் இயக்குநர் சற்குணம்.