விழுப்புரம்: செஞ்சி அருகே காதணி விழாவிற்கு அண்ணனை அழைக்க வந்த தம்பிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 36) சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ஆடி மாதம் பிறந்ததால், குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த முருகனும், அவரது மனைவி நந்தினியும் திட்டமிட்டனர். இதற்காக குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி மொட்டையடிக்க திட்டமிட்டனர். இதற்காக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து வந்தனர்.


இதையடுத்து தனது சகோதரரான விநாயகத்தை (40) அழைப்பதற்காக அவரது வீட்டிற்கு முருகன் நேற்று முன்தினம் சென்றார். அவரும் சலூன் கடை நடத்தி வருகிறார். சலூன் கடைகள் பெரும்பாலும் செவ்வாய்கிழமைகளில் இயங்காது. இதனால் விநாயகம் நன்கு குடித்துவிட்டு வீட்டிலிருந்தார். அப்போது முருகனுக்கும், விநாயகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறியது. இதில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த விநாயகம், முருகனின் மார்பில் குத்தினார்.


இதில் சம்பவ இடத்திலேயே முருகன் துடி துடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வளத்தி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகனின் அண்ணன் விநாயகம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். குழந்தைகளின் காதணி விழாவிற்கு அழைக்க வந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.