கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.


 "கள ஆய்வில் முதலமைச்சர்" 


தமிழ்நாட்டில் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.


இந்த நிலையில் முதலமைச்சர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், விரிவாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


ஆட்சியர்களுடன் ஆலோசனை:


இதனிடையே  இன்று, மதுரை மாவட்டத்தில்  நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்வுள்ளார் என்றும், மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலக பணிகளைப் பார்வையிட உள்ளார் என கூறப்பட்டுள்ளது. 


மேலும், மறைந்த சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மணி மண்டபத்தை திறந்து வைப்பார் என்றும், ஆழ்வார்புரம் – ஓபுளா படித்துறை இணைப்பு பாலத்தையும் திறந்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அப்போது மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்ட ஆட்சியருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.  அதையடுத்து, கீழடி அருங்காட்சிய்கத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.


இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வருகையொட்டி, மதுரையில் பலத்த பாதுகாப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.