விழுப்புரம் நகரம் முழுவதும் 3 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம் இருந்தும், மர்மநபர்கள் சிசிடிவி கேமராக்கள் இல்லாத பகுதியை தேர்வு செய்து வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது மக்களிடையே மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரத்தில் தொடரும் திருட்டு சமபவங்கள் - பொதுமக்கள் அச்சம்


விழுப்புரம் அருகே தொடர்ந்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் மனைவி ரூபி (28). இவர் கடந்த 18ம் தேதி இரவு, தனது தந்தை அந்தோணிசாமியுடன் இருசக்கர வாகனத்தில், காகுப்பம் நோக்கி சென்றபோது, கீழ்ப்பெரும்பாக்கம் சுடுகாடு அருகே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், ரூபி கழுத்திலிருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.


அதே நாளில் விழுப்புரம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஏசுராஜ் மகன் ஸ்டீபன் இவர் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் அருகே பைக்கில் அமர்ந்து மொபைல்போன் பேசிக்கொண்டிருந்த போது பைக்கில் வந்த இருவர் இங்கு மது அருந்தலாமா எனக்கேட்டு, ஸ்டீபனை கல்லால் தாக்கிவிட்டு 2 சவரன் தங்க செயின், மொபைல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துச்சென்றுள்ளனர்.


மீன் வியாபாரிகளை வழிமறித்து பணம் பறிப்பு 


கடந்த 8ம் தேதி பனையபுரம் பகுதியிலிருந்து, விழுப்புரம் மீன் மார்க்கெட்டிற்கு அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 மீன் வியாபாரிகளை மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு, பணத்தை பறித்து சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பட்டப் பகலில் காலை 10 மணியளவில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற நர்சிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 5 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளனர்.


காவல்துறை அதிகாரி வீட்டில் திருட்டு


இரு தினங்களுக்கு முன்பு, வழுதரெட்டி பாண்டியன் நகரில், ஓய்வு பெற்ற கண்டக்டர் ஆறுமுகம் வீட்டில், மாலை 6 மணிக்கு கதவை உடைத்து புகுந்து, 3 மர்ம நபர்கள் 6 சவரன் நகை, ரூ.1,500 பணத்தை திருடிச் சென்றனர். இதேபோல் கடந்த வாரம் சாலாமேடு மின்துறை ஊழியர் வீட்டில் 40 சவரன் நகை திருட்டு போனது. அருகே என்.ஜி.ஓ., காலனியில் காவல்துறை அதிகாரி வீட்டில் 50 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது.


தொடர் திருட்டும், வழிப்பறி சம்பவங்களை குறைக்க வேண்டும்


விழுப்புரத்தில் தொடர்ந்து, இரண்டு வாரங்களில் தொடர் திருட்டும், வழிப்பறி சம்பவங்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிடும் கும்பல், அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லத்தை கண்காணித்து திருட்டில் ஈடுபடுகின்றனர். வழிப்பறி சம்பவமும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடக்கிறது. இதில், மீன் வியாபாரியிடம் வழிப்பறி செய்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த 3 பேரை மட்டும் போலீசார் கைது செய்தனர். ஆனாலும், தொடர்ந்து, திருட்டும் வழிப்பறியும் குறையவில்லை, இதனால் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரத்தில் அருகருகே 3 காவல் நிலையம், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், துணை காவல் கணிப்பாளர் அலுவலகம் என போலீசார் நடமாட்டம் இருந்தும், போதிய இரவு ரோந்து போன்ற கண்காணிப்பில்லாததால், திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால், காவல் துறை நடவடிக்கை எடுத்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.