விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை வழிமறித்து, அவதூறாக பேசி அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது - அரிவாள் பறிமுதல் - பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு மிரட்டுவது போல சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரிக்கை. இது தான் செய்தி... யார் அந்த நபர்? நடந்தது என்ன?




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொக்கலிங்கபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகசாமி மகன் திருக்குமார் (21). வாலிப முறுக்கு என்பார்களே... அது தலைவருக்கு கொஞ்சம் அதிகம். எப்போதும் தன்னை சினிமாவில் வரும் வீச்சருவாள் வீராச்சாமி வகையாறா என்று நினைத்துக் கொள்வாராம். எப்போதும் கையில் பொருளோடு போவதும், பொங்குவதுமாய் தல... சுத்தி வந்துள்ளார். சரி... எத்தனை நாள் தான் இப்படியே போஸ் கொடுப்பது... அடிச்சுப்பார்க்கலாம் என களமிறங்கினார் திருக்குமார்.  விளாத்திக்குளத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் ஒருவரை வழிமறித்து, அவதூறாக பேசி அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சம்மந்தப்பட்ட நபரும் பயந்து போக... ரைட்டு ரைட்டு... நம்ம பாமுல தான் இருக்கோம் என காலரை தூக்கி விட்டு, கெத்தாக நடந்திருக்கிறார் திருக்குமார்.


ஆனால், மிரட்டலுக்கு பயந்த நபர், நேராய் காவல் நிலையத்தில் கம்ளைண்ட் செய்ய,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில், விளாத்திக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் கலா அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் திருக்குமாரை தெருத்தெருவாய் தேடினர். 


தீவிர ரோந்து மேற்கொண்டு மேற்படி திருக்குமாரை ஒரு வழியாக கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு பெரிய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மேற்படி திருக்குமார் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கையில் பெரிய அரிவாளை  வைத்து மிரட்டுவது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதும் தெரியவந்துள்ளது. ‛எங்கள மாதிரி பெர்ய பெர்ய ரவுடிகளெல்லாம் இப்படி தான் சார் பண்ணுவோம்...’ என திருக்குமார் டயலாக் பேச, பேசிய வாயிலேயே இரண்டு போடு போட்டு போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர் காவலர்கள். 




தென்னை மரத்துல ஒரு குத்து, பானையில ஒரு குத்துங்கிற மாதிரி, தம்பிக்கு எல்லா பிரிவையும் சேர்த்து ஒரு கேஸ் போட்டு தனிப்பறவையை சிறைப்பறவையாக்கி அனுப்பி வைத்தது காவல் துறை. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு மிரட்டுவது போல சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.