கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜஸ்னா சலீம். 28 வயதான இவர், சிறந்த ஓவியரும் கூட. இவருக்கு கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோயில் மிகவும் பிடிக்குமாம். முஸ்லீம் என்பதால் இவரால் கோயிலுக்கு செல்ல முடியவில்லை. இருப்பினும் குருவாயூர் கிருஷ்ணன் புகைப்படங்களை பார்த்து, அவருக்கு கிருஷ்ணன் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் தனது ஓவியத் திறமையை பயன்படுத்தி கிருஷ்ணன் படத்தை வரையத் தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் அவரது கை வண்ணத்தில் கிருஷ்ணர் ஜொலித்தார். அதை கண்டு அசந்து போன பலர், அவரது கிருஷ்ணர் ஓவியங்களை பணம் கொடுத்து வாங்கிச் செல்ல ஆரம்பித்தனர். தன்னுடைய காணிக்கையாக ஆண்டுதோறும் விஷூ மற்றும் ஜன்மாஷ்டமி நாட்களில் தான் வரைந்த கிருஷ்ணர் படங்களை குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்குவதை வாடிக்கையாக்கினார். கோயிலுக்குச் செல்ல முடியாது என்பதால் தான் வரைந்த ஓவியங்களை கோயில் ஊழியர்களிடம் கொடுத்து அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தான் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் அருகே உள்ள உளநாடு கிருஷ்ணசாமி கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர், ஜஸ்னா சலீமை சந்தித்தனர். தங்களுக்கு குழந்தை கிருஷ்ணம் ஓவியம் ஒன்று தேவைப்படுவதாகவும், அதை வரைந்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி கோயிலுக்கு வந்து நேரடியாகவே அந்த படத்தை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். மாற்று மதத்தினர் தங்கள் கோயிலுக்குள் வர எந்த தடையும் இல்லை என்றும் அவர்கள் கூற, ஜஸ்னாவிற்கு ஒரே மகிழ்ச்சி. தான் கிருஷ்ணரை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு. அது விரைவில் நடந்து விட வேண்டும் என்பதற்காக வேகமாக ஓவியப்பணியை தொடங்கினார்.
திட்டமிட்டபடி குழந்தை கிருஷ்ணர் படத்தை வரைந்த அவர், சம்மந்தப்பட்ட கோயிலுக்கு நேரடியாகச் சென்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய ஜஸ்னா சலீம், ‛‛கோயிலுக்குச் சென்று கிருஷ்ணரை காண வேண்டும் என்கிற என் ஆசை நிறைவேறிவிட்டது. நூற்றுக்கணக்கான கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்திருந்தாலும், என் வீட்டில் ஒரு கிருஷ்ணர் படம் கூட வைத்திருக்கவில்லை. என் மத நம்பிக்கை அதை அனுமதிக்கவில்லை. முதலில் என் குடும்பத்தினர் கிருஷ்ணர் படம் வரை அனுமதிக்கவில்லை. என் மத நடைமுறைகளை நான் முறையாக பின்பற்றுவதால், அவர்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை. துபாயில் பணியாற்றம் என் கணவரும், என் குழந்தைகளும் எனக்கு ஆதரவாக உள்ளனர். மாதம் 5 கிருஷ்ணர் படங்கள் வரை வரைந்து ,மாதம் ரூ.5 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன்,’’ என்றார்.
இதற்கிடையில் ஜஸ்னாவை சமூக வலைதளத்தில் பலரும் கொண்டாடி வருகின்றனர்.