தருமபுரி மாவட்டம் வத்தல்மலை மலை கிராமத்தில் பெரியூர் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மலை பழங்குடியினர் மற்றும் விவசாயிகளுடன் தமிழக முதல்வர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடியதுடன், அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து, வருவாய் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை உள்ளிட்ட அரசு துறைகளின் சார்பில் 2,116 பயனாளிகளுக்கு 16 கோடியே 47 லட்சத்து 35 ஆயிரத்து 433 மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வத்தல்மலை மலை கிராம பழங்குடி மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறியும் வாய்ப்புக்காக மகிழ்ச்சி அடைகிறேன். ‘கலைஞர் வரும் முன் காக்கும் திட்டம்’ என்ற திட்டம் சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சியின்போதே செயல்பாட்டில் இருந்த திட்டம் தான் இது. மீண்டும் தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் அந்த திட்டத்துக்கு புத்தாக்கம் தரப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் நடப்பது என் ஆட்சி அல்ல. நம் ஆட்சி, நம் எல்லோருக்குமான ஆட்சி இது. மருத்துவத்தை தேடி மக்கள் சென்ற நிலையை மாற்றி, நோய் பாதிப்புக்கு உள்ளான ஏழை, எளியவர்களை தேடி வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் சூழலை இந்த ஆட்சி ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று முழுமையாக அழிக்கப்படவில்லை என்றாலும் ஓரளவு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். தேர்தலுக்கு முன்பு தேர்தல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளை, வெற்றி பெற்ற பின்னர் முழுமையாக நிறைவேற்றுகிறார்களா என தெரியாது. ஆனால், திமுக சார்பில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரவள்ளி உழவர்கள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்களை சந்தித்து கோரிக்கைகள் கேட்டறியப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கையை படிப்படியாக நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளோம். கண்டிப்பாக செய்து தருவோம்.
மக்களின் தேவையை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தரும் அரசு தான் திமுக அரசு. மகளிர் சுய உதவிக் குழுவை முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தருமபுரி மாவட்டத்தில் தான் முதன் முதலில் தொடங்கி வைத்தார். அப்போது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சுழல்நிதி, வங்கிக் கடன், மானியம் ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி மகளிர் சுய சார்புடன் வாழ வழி செய்யப்பட்டது. இடையில் 10 ஆண்டுகள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் பழைய கம்பீரத்துடன் மீண்டுடெழும் வகையில் தமிழக அரசு அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளது என பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சனி, தருமபுரி மக்களவை உறுப்பினர் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.