வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது குடியாத்தம். குடியாத்தம் அருகே உள்ள மேல்பட்டி அருகில் அமைந்துள்ளது அழிஞ்சிகுப்பம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் ஜெய்சங்கர். அவருக்கு வயது 43. அவருடைய மனைவி புனிதா. அவருக்கு வயது 32. ஜெய்சங்கர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி புனிதா ஆம்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.


சந்தேக புத்தி:


ஜெய்சங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த பழக்கத்தால் நாளடைவில் ஜெய்சங்கர் மதுவிற்கு அடிமையாகி உள்ளார். இதன் காரணமாக கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடில் தகராறில் ஈடுபட்டு வந்த ஜெய்சங்கர், தன்னுடைய மனைவி புனிதாவின் நடத்தை மீதிலும் சந்தேகம் கொண்டுள்ளார்.


இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு புனிதா ஆம்பூரில் உள்ள தொழிற்சாலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். தனது மனைவிக்காக ஏற்கனவே ஜெய்சங்கர் அந்த இடத்தில் காத்திருந்தார். மேலும், அவர் கையில் கத்தியை மறைத்து வைத்திருந்தார்.


9 இடங்களில் கத்திக்குத்து:


தனது மனைவி புனிதாவை பேருந்து நிறுத்தத்தில் கண்டதும் ஜெய்சங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். ஒரு முறை, இரு முறையல்ல, தொடர்ந்து 9 முறை மனைவி புனிதாவை ஜெய்சங்கர் கத்தியால் மிக கொடூரமாக குத்தியுள்ளார். சரமாரியான கத்துக்குத்துக்கு ஆளான புனிதா சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.


பதைபதைக்கும் வீடியோ:


இந்த சம்பவம் நடைபெற்றபோது அங்கே அருகில் ஏராளமான பொதுமக்கள் இருந்தனர். ஆனால், அவர்கள் யாருமே புனிதாவை காப்பாற்ற முன்வரவில்லை. ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த புனிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பொது இடத்தில் மனைவியை 9 முறை கத்தியால் குத்திக் கொன்ற ஜெய்சங்கரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அருகே இருந்த சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் பரவி பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.


சமீபகாலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குடும்பங்களில் மது போதை காரணமாக பெண்கள் மீது வீண் சந்தேகம் கொண்டு வன்முறைகளை தொடுக்கும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது சமூகத்திற்கும், குடும்பங்களுக்கும் ஆரோக்கியமான போக்கல்ல என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  


மேலும் படிக்க: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை


மேலும் படிக்க: Crime: “நிரந்தர வேலை கிடைக்காதோ என்ற அச்சம்” - 3வது பெண் குழந்தையை கொன்ற தம்பதி.. ராஜஸ்தானில் கொடூரம்!