பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹரியானா அரசு புதுத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, வழிபாட்டுத் தலங்களில் ஒலிப்பெருக்கி மூலம் மாணவர்கள் அதிகாலையிலேயே எழுப்பி விடப்பட உள்ளனர்.
நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்வு தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. அனைத்துத் தேர்வுகளும் மதியம் 12.30 மணி முதல் 3.30 வரை நடைபெற உள்ளன.
5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதும் பொதுத் தேர்வுகள்
2,85,138 மாணவர்கள் 10ஆம் வகுப்புத் தேர்வுக்கும் 2,57,208 மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வுக்கும் முன் பதிவு செய்துள்ளனர். 10ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 25ஆம் தேதி முடிவடைய உள்ளது. 12ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 28ஆம் தேதி முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் ஹரியானா அரசு புதுத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, வழிபாட்டுத் தலங்களில் ஒலிப்பெருக்கி மூலம் மாணவர்கள் அதிகாலையிலேயே எழுப்பி விடப்பட உள்ளனர்.
வழிபாட்டுத் தலங்களில் அலாரம்
அதிகாலை 4.30 மணிக்கு வழிபாட்டுத் தலங்களில் ஒலிப்பெருக்கி மூலம் அலாரம் ஒலிக்கப்பட உள்ளது. குறிப்பாக கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களில் இந்த அலாரம் செயல்பட உள்ளது. இதன் மூலம் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பயன் பெறுவர் என்று அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது கட்டாயமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த முன்னெடுப்புக்கு ஒருசேர ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் தங்களின் பணிச்சுமை கூடும் என்று கவலை தெரிவித்துள்ள நிலையில், முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு இதனால் இடையூறு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகள்
தமிழ்நாட்டில் மார்ச் மாதத்தில் 2022- 23 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 7,600 பள்ளிகளில், 8,51,482 மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர். 11ஆம் வகுப்புத் தேர்வை 7,87,783 மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்குத் தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை
10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், 9,38,067 பேர் 10-ம் வகுப்பு தேர்வை எழுத உள்ளதாக இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது.