வேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகைகள் இரண்டரை கிலோ வெள்ளி பொருட்கள் ரூ.60 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டுப்போனது. இதுதொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


வேலூர் மாவட்டம், வேலூர் சேண்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் வயது (46) கிருஷ்ணகிரி மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பரமேஸ்வரியின் தந்தை கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். இதனால் தந்தையின் காரியத்திற்காக இவர் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வள்ளிமலை அருகேயுள்ள மேல்பாடி கிராமத்திற்கு சென்றுள்ளார். காலை அவரின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.


 




இதனை அந்த தெருவில் வசிப்பவர்கள் பார்த்து சங்கருக்கு தொலைபேசியின் மூலம் தகவல் அளித்தனர். அதையடுத்து அவர் உடனடியாக மேல்பாடியில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்தார்.மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து , வீட்டின் உள்ளே புகுந்து இரண்டு பீரோக்களையும் உடைத்து, சுமார் 15 சவரன் தங்கநகைகள் மற்றும் இரண்டரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் பீரோவில் இருந்த கவரிங் நகைகளை மட்டும் அங்கேயே விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் வடக்கு காவல்நிலைய காவல் ஆய்வாளர் முத்துக்குமார் துணை ஆய்வாளர் அஜந்தா மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். 


 




 


காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில், சங்கர் குடும்பத்தினரின் நடவடிக்கையை நன்கு நோட்டமிட்ட அந்த பகுதியை சார்ந்த மர்மநபர்கள் தான் யாரோ இவர்கள் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வீட்டில் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து தப்பித்துசென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். ஆட்கள் நடமாட்டம் மிகுந்து சேண்பாக்கம் செல்வ விநாயகர் ஆலயம் அருகில் உள்ள வீட்டில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 7 ஏழு நாளைக்கு கொட்டப்போகும் மழை.. இந்த மாவட்ட மக்கள் உஷார்..