வேலூரில், நள்ளிரவில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண்ணை கடத்திக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து  செல்போன், பணம் மற்றும் நகையை பறித்து சென்றுள்ளது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு 2 இளைஞர்கள் போதையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர், 2 நபர்களையும் பிடித்து விசாரணை செய்தபோது. அவர்கள் இதற்கு முன் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டது தெரியவந்தது.


இதை அடுத்து முழு போதையில் இருந்த 2 நபர்களையும் காவல்நிலையம் அழைத்து சென்ற தீவிர விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. அந்த விசாரணையில் அவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக இளம் சிறார் உட்பட 4 நபர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில். நேற்று பிற்பகல் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஈ மெயில் மூலம் ஒரு புகார் மனு வரப்பெற்றுள்ளது. 



அந்த புகாரில் ஒரு பெண் மற்றும் அவருடைய ஆண் நண்பரும் கடந்த 16-ஆம் தேதி இரவு வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்து விட்டு நள்ளிரவு ஒரு மணியளவில் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறியதாகவும், அந்த ஆட்டோ போகும் வழியில் மருத்துவமனை நோக்கி செல்லாமல் திசைமாறி சென்றதாகவும், தாங்கள் அதை கேட்டபோது அந்த ஆட்டோவில் வந்த 5 நபர்கள் தங்களை மிரட்டி ஒரு மறைவான இடத்திற்கு கடத்திச்சென்றதாகவும், அங்கு வைத்து தங்களிடமிருந்த செல்போன்கள், பணம் சுமார் 40,000 மற்றும் 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி அபகரித்துக் கொண்டதாகவும், மேலும் அந்த 5 நபர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை உட்படுத்தியதாகவும், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.



இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வழக்குக்கான சொத்துக்கள், தடயங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வந்து புகாரளிக்கவும், குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுத்தரவும் வழிவகுக்கும் என வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் ஆனி விஜயா ஐபிஎஸ் தெரிவித்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறப்பட்டுள்ளது.