புதுச்சேரியில் ஆண்டு முழுவதும் பெருக்கெடுக்கும் ஜீவநதிகளோ, தண்ணீரைத் தேக்கி வைத்து பயன்படுத்தும் வகையில், பிரம்மாண்டமான அணைக்கட்டுகள் தற்போதுவரை இல்லை. கடைமடைப் பகுதியான புதுச்சேரியில் 84 ஏரிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இவை குடிநீர் விநியோகத்துக்கும், விவசாயப் பணிகளுக்கும் அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் மிகப்பெரிய பழம்பெருமை வாய்ந்த ஏரியாகத் திகழ்வது ஊசுடு ஏரி. சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த ஏரிக்கு மதகுகளும், கால்வாய்களும் கட்டினார் என்று திருவக்கரைக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் இருந்து மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஏரி. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 15.54 சதுர கி.மீ., ஏரிக் கரையின் மொத்த நீளம் 7.275 கி.மீ., மொத்தக் கொள்ளளவு 540 மில்லியன் கன அடி. ஊசுடு ஏரிக்கு, சங்கராபரணி ஆறு மற்றும் வீடூர் அணையில் இருந்து நீர் வருகிறது. மேலும், சுத்துக்கேணி கால்வாய் மூலம் செஞ்சியாற்றிலிருந்து ஏரிக்குப் பெருமளவில் நீர் வருகிறது. பாசன வசதிபெறும் நிலங்கள் தோராயமாக 1,500 ஹெக்டேர் ஆகும்.
புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரி 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இதில், 410 ஹெக்டேர் தமிழகப் பகுதியிலும், 390 ஹெக்டேர் புதுச்சேரி பகுதியிலும் உள்ளது. புதுச்சேரியில் தொடங்கி கிழக்குப் பகுதியில் தமிழக எல்லைப்பகுதியான விழுப்புரம் மாவட்ட வானூர் புதுத்துறை, காசிப்பாளையம், மணவெளி, பெரம்பை ஆகிய பகுதிகள் வரை ஏரி பரவியுள்ளது. புதுச்சேரிக்குச் சுற்றுலா வருபவர்கள் தவறாமல் சென்று வரும் பகுதிகளுள் ஊசுடு ஏரியும் ஒன்று.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு, அதன் மேலே பறக்கும் அழகிய பறவைகள், அழகிய படகுப்பயணம் என இந்த ஏரி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும். இந்த ஏரி, புதுச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் உயிர்நாடியாகவும் விளங்குகிறது. "ஊசுடு ஏரி புதுச்சேரி, தமிழகத்தில் விழுப்புரம் பகுதியில் பரவியுள்ளது. 2008-ல் புதுச்சேரி அரசும் 2014-ல் தமிழக அரசும் ஊசுடு ஏரியைப் பறவைகள் சரணாலயமாக அறிவித்தன.
மேலும், உணவு மற்றும் இனப்பெருக்கத்துக்காக இங்கு 170 பறவை இனங்கள் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரியில் அதிக அளவில் வருகின்றன. ஏராளமான பட்டாம்பூச்சிகளும் இங்கு வலம் வரும் தனியார் நிறுவனம் ஒன்று ஊசுடு ஏரியை ஆய்வு செய்து 168 பறவை இனங்கள் இங்கு வருவதாகவும், அதில் 29 பறவை இனங்கள் வெளிநாட்டைச் சேர்ந்தது என்றும் தெரிவித்தன. நாமக்கோழி என்ற நீர்ப்பறவை இனம் இங்குதான் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்கிறது.
ஊசுடேரிக்கு வரும் பறவைகளின் சில வகைகள் :
பூநாரை, நத்தை குத்தி நாரை, மஞ்சள் மூக்கு நாரை, உண்ணிக்கொக்கு, கரண்டிவாயன், குள்ளத்தாரா, காட்டு வாத்து, பட்டைத்தலை வாத்து, கருநீர்க்கோழி, சாதாரண மைனா, நீலச்சிறகி, அன்னம், வெண்தலை சிலம்பன்(பன்றிக்குருவி), குளத்துக் கொக்கு, தட்ட வாயன், ஊசிவால் வாத்து, சாம்பல் கூழைக்கடா, குயில்.