புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள மண்டையூர் பகுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி (60). விவசாயியான இவரது மனைவி வள்ளி (57). இவர்கள் நாவலிங்ககாடு பகுதியில், அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி அங்கு வசித்து வந்துள்ளார். இவருக்கு பாலசுந்தர், கோபி என்ற இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கோபி பொறியியல் படித்து முடித்து, வெளிநாட்டில் வேலை வரும் நிலையில், பாலசுந்தர் கேட்டரிங் படித்து வீட்டில் இருந்திருக்கிறார்.
மனநலம் பாதிப்பு
கடந்த 2 ஆண்டுளாக இவர் வேலைக்கு போகாத காரணத்தால், மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இவருக்கும் அவரது தாய்க்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மனநல மருத்துமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கடைசி வரை அவர்கள் பாலசுந்தரை மருத்துமனைக்கு அழைத்துச் செல்ல வில்லை.
இன்னும் சிலர் உனது மகனுக்கு முனி பிடித்திருக்கிறது. அதனால் பூசாரியை வைத்து அதை விரட்டு என்று கூறியிருக்கிறார்கள். இதனை நம்பிய, ரெங்கசாமி பூசாரி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்தத்தகவல் பாலசுந்தருக்கு தெரிய வரவே,நேற்று மாலை வயல்வெளியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த தந்தையை வீட்டிற்கு வருமாறு அழைத்துச்சென்றதாக சொல்லப்படுகிறது.
அதிர்ச்சியில் பால்காரர்:
இந்த நிலையில் வழக்கம் போல மாலை 5.45 மணிக்கு ரெங்கசாமியின் வீட்டில் பால கறக்கும் பால்காரர் வந்திருக்கிறார். அப்போது வீட்டின் முன் உட்கார்ந்திருந்த பால சுந்தரிடம் பால்கறக்க வேண்டும், அப்பா அம்மா எங்கே என்று கேட்டு இருக்கிறார். இதற்கு பால சுந்தர் எதுவும் பேசாமல் இருந்த நிலையில், பால்காரர் அவர்களது வீட்டை ஒட்டிய தாழ்வாரத்தில் அமைக்கப்பட்டிருந்த சமையலறைக்கு சென்று பார்த்து இருக்கிறார். அப்போது அங்கு ரெங்கசாமி மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகிய இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பால்காரர் உடனே அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவிக்க, தகவல் போலீசாருக்கு சென்றது. இதனையடுத்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்த நிலையில், கைரேகை நிபுணர்கள் கொண்டும் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து தம்பதியினர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தவறை ஒப்புக்கொண்ட மகன்:
இதனையடுத்து, பாலுவை அழைத்து போலீசார் நடத்திய விசாரணையில், தாய் தந்தையரை கொடூரமாக கழுத்தை அறுத்தும் அடித்தும் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் திருமணம் செய்து வைக்காததால் கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.