கும்பகோணம் பகுதியில் காய்கறி லாரியில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கடத்தி வந்த மூவரை 3 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர் .
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த மாதம் பத்தாம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக காய்கறி மளிகை உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களையும் அடக்க தமிழக அரசு உத்தரவிட்டு தற்போது அது நடைமுறையில் உள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் சில நபர்கள் மது பாட்டில்களை வாங்கி வைத்துக் கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நிலையில் காவல்துறையினர் ஒரு சிலரை பிடித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சமீபகாலமாக அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது அதனை உறுதி செய்யும் வகையில் இன்று கும்பகோணத்தில் காய்கறி வாகனத்தில் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த சம்பவம் நடந்துள்ளது
தாராசுரம் பகுதியில் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு அப்பகுதியில் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவுபடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், தனிப்படை உதவிஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையில் காவல்துறையினர் கும்பகோணம் புறவழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஈச்சர் லாரியை காவல்துறையினர் மறைத்துள்ளனர். ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளது. அங்கிருந்த காவல்துறையினர் தங்களது வாகனத்தை எடுத்துக்கொண்டு 3 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று அசூர் புறவழிச் சாலையில் ஈச்சர் வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். வாகனத்தை சோதனையிட்ட போது அதில் காய்கறி மூட்டைகளுடன் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1616 கர்நாடகா மாநில மது பாட்டில்கள் இருந்தன. அவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர் உட்பட 3 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த முருகையா கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மதுரை பகுதியைச் சேர்ந்த காமேஷ் குமார் என்பது தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில் தொடர்ந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் லாரி பொறையாறு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமானது என காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். தற்பொழுது ஜெயக்குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.