தஞ்சை மாவட்டம் நாஞ்சிகோட்டை மறியல் பகுதியை சேர்ந்தவர் அறிவுடைய நம்பி (41). இவர்  தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தஞ்சை சட்டமன்ற தொகுதி செயலாராக இருந்து வந்துள்ளார். இவருக்கு முதல் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில்  முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி கடலூரை சேர்ந்த 28 வயதான   பெண்ணுடன் கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயம் செய்துள்ளார். கடந்த மே மாதம் திருமணம் நடைபெற இருந்த  நிலையில் அறிவுடையநம்பிக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அறிந்த கடலூரை சேர்ந்த பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.


இதில் ஆத்திரமடைந்த அறிவுடையநம்பி முகநூலில் கடலூர் பெண்ணுடன் எடுத்து கொண்ட  புகைபடத்தை பதிவிட்டு உள்ளார். போலியாக பெண்ணின் முகத்தை மட்டும் மாற்றி ஆபாசமான புகைபடத்தை பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்  பாதிக்கப்பட்ட கடலூரை சேர்ந்த பெண் கடந்த ஜூலை மாதம் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அறிவுடைநம்பியை தேடி வந்தனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுடைநம்பியை  கட்சியின் தஞ்சை தொகுதி செயலாளர் பொறுப்பு மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார். 



இதனிடையில் அப்பெண், தஞ்சை காவல் துறையிர்,  நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அறிந்து, தனது வாட்ஸ்ஆப்பில், போலீசார் உடனடியாக அறிவுடையநம்பியை கைது செய்ய வேண்டும், இரண்டு பெண்களுடன் தொடர்பும், தனிப்பட்ட முறையில் மிரட்டினார். என்னுடைய பல்வேறு புகைப்படங்களை முகநூலில் பதிவிறக்கம் செய்தும், இருவரும் தனியாக இருக்கும் ஆபாச புகைப்படத்தை வைத்து மிரட்டி வருகின்றார். போட்டோவை பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்டுள்ளார். எஸ்பி, டிஐஜி புகார் அளித்துள்ளேன். போலீசார் காலில் விழுந்து அழுதேன்,  எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். நான் இரண்டு முறை தனிமையில் சிக்கி கொண்டேன் அப்போது என்னை மோசமாக தாக்கினார்.  எனவே அறிவுடையநம்பியை கைது செய்யா விட்டால், தஞ்சை எஸ்பி அலுவலகத்தில் தீக்குளிப்பேன் என்று பதிவு செய்தார்.



இதனை தொடர்ந்து இரண்டு மாதமாக காவல்துறையினரிடம் சிக்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து தஞ்சை போலீசார், அறிவுடையநம்பியை கைது செய்ய, அவருடைய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர்களை  ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் தஞ்சை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா உத்தரவின் பேரில் வல்லம்  அனைத்து மகளிர் காவல்துறையினர்,  சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து அறிவுடைநம்பியை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து  வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அறிவுடைநம்பியை காவல்துறையினர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து அறிவுடைநம்பி மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அறிவுடைநம்பியை கைது செய்து  சிறையில் அடைத்தனர்