திருமணத்தை மீறிய உறவு பல நேரங்களில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பெண் ஒருவர் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தது அவருடைய உயிரையே பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்தர்பால். இவர் சிஆர்பிஎஃப் படையில் ஜவானாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீதா(34) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்காக அங்கு பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது கடந்த 21ஆம் தேதி தன்னுடைய மனைவியை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவருடைய தொலைப்பேசி அழைப்பை யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த இந்தர்பால் அப்பகுதி காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்தர்பால் அளித்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதி காவல்துறையினர் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது இந்தர்பாலின் மனைவி வீட்டில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த வீட்டில் சில பீர் பாட்டீல்கள் ஆகியவை இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தர்பாலுக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. அவர் மீண்டும் கான்பூர் திரும்பியுள்ளார். தன்னுடைய மனைவியை காணவில்லை என்ற புகாரை அளித்துள்ளார்.
அவர் கொடுத்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது கடைசியாக கீதாவின் மொபைல் போனிற்கு கடைசியாக முக்தர் என்ற கார் மெக்கானிக் பேசியது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் கீதாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் கீதாவை கொலை செய்து கழிவு நீர் தொட்டிக்குள் போட்டுள்ளதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
அந்த கழிவுநீர் தொட்டியிலிருந்து அவரின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலைக்கான காரணத்தையும் முக்தர் கூறியுள்ளார். அதில், அவருக்கும் கீதாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் கடந்த சில மாதங்களாக அவர் வேறு நபருடன் பழகி வருவதை இவர் தெரிந்து கொண்டுள்ளார். அதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு கொலை செய்ததாக முக்தர் ஒப்புக் கொண்டுள்ளார். திருமணத்தை மீறிய பந்தம் கடைசியில் சிஆர்பிஎஃப் காவலரின் மனைவியின் உயிரை பறித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்