மாதந்தோறும் சிவராத்திரி விரதம்(shivaratri vratham) மேற்கொள்வது மிகப்பெரிய புண்ணியம். நம்முடைய பாவங்களெல்லாம் காணாமல் போகும். அப்படி மாதந்தோறும் விரதம் இருக்க இயலாதவர்கள், மாசியில் வரும் மகாசிவராத்திரி(mahashivratri) நாளில் விரதம் இருந்தால் தெரியாமல் செய்த பாவங்களும், தெரிந்தே செய்த பாவங்களும் நீங்கும். கர்மவினைகள் அகன்று புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.


இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி (01.03.2022) மகாசிவராத்திரி வருகிறது. மகாசிவராத்திரி என்றால் 'சிவபெருமானின் சிறந்த இரவு' என்று பொருள். இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனை வழிபடுவார்கள்.




விரத முறைகள் :


சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம். விரதம் மேற்கொள்ளும்போது உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். சில கோவில்களில் தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டே இருக்கிறார்கள். நம் உடல் உணவின்றி சிறிது வருந்தும்போது தான் எளிதாக வசப்படும்.


நாம் சொன்னபடி நம் மனது கேட்கும். அதற்காகத் தான் விரதமே. அவ்வாறு கேட்கும் மனதை இறைவனிடத்தில் செலுத்தி, அவனோடு சிந்தையில் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும். மறுநாள் காலை குளித்து பூஜைகள் செய்து, மீண்டும் சிவாலயங்கள் சென்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.


ஈஷா பெருவிழா


மேலும் சிவராத்திரி பெருவிழா குறித்த ஒரு கூடுதல் தகவல். கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா (நாளை) மார்ச் 1-ஆம் தேதி ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது. மார்ச் 1ம் தேதி இரவு விடிய விடிய சிவனுக்கு ஆராதனை செய்யப்பட்டு, இசை சங்கமம் முழுங்க பெரிய விழாவாக கொண்டாட இருக்கின்றனர். இந்த நாளில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்று பக்தர்களுக்கு உற்சாகத்தினை அளிக்க இருக்கின்றனர். 


தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக கலக்கிவரும் ஷேன் ரோல்டன் இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார். அதேபோல், தெலுங்கு பாடகி  மங்கலி, பாலிவுட் திரை உலகில் பல பக்தி பாடல்களை பாடியுள்ள பின்னணி பாடகர் மாஸ்டர் சலீமும் இவ்விழாவில் பாட உள்ளார். 


தொடர்ந்து, அசாமின் புகழ்பெற்ற பின்னணி பாடகர் பப்பான், ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பாடகர் ஹன்ஸ்ராஜ் ரகுவன்சியும் பங்கேற்க இருக்கின்றனர். 


இவ்வாறு, தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேஷ், அசாம் என பல மாநில கலைஞர்களுடன் ஈஷா மஹாசிவராத்திரி விழா களைகட்ட உள்ளது. இவ்விழா கோவை ஈஷாவில் (நாளை) மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது.  சிவனின் அருள் நிறைந்த இரவு என அழைக்கப்படும் மஹாசிவராத்திரி அன்று மக்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்திருப்பதற்காக  இத்தகைய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.


கடந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரியின் நேரலை  உலக அளவில் புகழ்பெற்ற கிராமி விருது வழங்கும் விழாவையே முந்தி அதிக பார்வைகளை பெற்று உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.


ஈஷா மையத்தில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை தமிழ் மொழியில் காண, ABP நாடு யூடியூப் சேனலில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட இருக்கிறது. மக்கள் தங்கள் இல்லங்களில் பாதுகாப்பாக இருந்தப்படியே நேரலையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Neet exam | 'சிறப்பு மருத்துவ வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்' - சிவகங்கை மாணவியின் கோரிக்கை என்ன?