உத்தரப்பிரதேசத்தில் தங்கையை கொலை செய்து, அவரது தலையுடன் அண்ணன் காவல் நிலையம் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பங்களும், எண்ணங்களும் மாறி விட்ட இன்றைய சமூகத்தில் முந்தைய காலங்களை விட அதிகமாகவே காதல் திருமணங்களும், மாற்று மத திருமணங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் சில திருமணங்களில் நடைபெறும் பிரச்சினைகள், ஆணவ படுகொலைகள் போன்ற குற்றச் சம்பவங்களுக்கு எவ்வளவு தான் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் குறைந்தபாடில்லை. அப்படி ஒரு குற்ற சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
அங்குள்ள பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிஃபா. 18 வயதான இவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த இந்து மத இளைஞரான சந்த் பாபு என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு ஆசிஃபா வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆசிஃபா, சந்த் பாபுவுடன் இணைந்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆசிஃபா குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பல இடங்களில் தேடி ஆசிஃபாவையும், சந்த் பாபுவையும் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிஃபா குடும்பத்தினர் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கணவர் சந்த் பாபு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வேற்று மத இளைஞரை காதலித்து வீட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக ஆசிஃபாவுக்கும், அவரது சகோதரர் ரியாஸூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரியாஸ், வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் ஆசிஃபாவின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் தலையை கையில் பிடித்துக் கொண்டே வீட்டில் இருந்து காவல் நிலையம் வரை நடந்தே சென்று சரணடைந்துள்ளார். கையில் ஆசிஃபாவின் தலையுடன் ரியாஸ் வந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தலையையும், வீட்டில் இருந்த ஆசிஃபாவின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரியாஸ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.