உத்தரபிரதேச மாநிலத்தில் வாய்ப்பாட்டை ஒழுங்காக சொல்லாத 11 வயது மாணவரின் கையில் ஆசிரியர் ஒருவர் ட்ரில் மிஷின் கொண்டு துளையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சிசாமாவ் என்ற இடத்தில் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கியுள்ளது. இந்த பள்ளியில் கடந்த 24ம் தேதி 5 வகுப்பு படிக்கும் விவான் என்ற மாணவன் 2ம் வாய்பாட்டை ஒழுங்காக சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. 


இதனால் ஆத்திரமடைந்த அனுஜ் பாண்டே என்ற ஆசிரியர், மாணவன் விவானின் இடது கையில் பவர் ஹேண்ட் டிரில்லிங் மிசின் கொண்டு துளையிட்டுள்ளார். இதனால் விவான் கையில் இருந்து ரத்தம் அதிவேகமாக வெளியேற தொடங்கியுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவருக்கு அருகிலிருந்த ஆசிரியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அனுஜ் பாண்டே ஆசிரியரை காப்பாற்ற உடன் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் முயற்சித்துள்ளனர். 


இந்தநிலையில், அழுதுகொண்டே வீட்டுக்கு சென்ற விவான் கையில் இருந்த காயத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர்கள் பள்ளிக்கு முன்பு சென்று ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். தகவலறித்து விரைந்து வந்த மாவட்ட கல்வி அதிகாரி சுர்ஜித் குமார் சிங், சிறுவனின் பெற்றோரை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளார். தொடர்ந்து, ஆசிரியர் அனுஜ் பாண்டேவை பணியில் இருந்து நீக்குவதாக உறுதியளித்தார்.




சிறுவனின் கையில் ஏற்பட்ட காயத்தை மறைக்க முயற்சித்த மற்ற ஆசிரியர்கள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்தார். 


இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் விவான் கூறுகையில், “அனுஜ் சார் என்னிடன் இரண்டாம் வாய்ப்பாடு சொல்ல சொன்னார். நான் சொல்ல முயற்சி செய்து சரியாக வரவில்லை. மறந்துவிட்டேன். ரொம்ப கோவம் ஆன அனுஜ் சார் அருகிலிருந்த ட்ரில் மிசின் கொண்டு எனது இடது கையில் துளையிட்டார். என் பக்கத்தில் இருந்த கிருஷ்ணா என்ற மாணவன், மிசினை ஆப் செய்ய முயற்சி செய்து பிளக்கை புடுங்கிவிட்டான். அதற்குள் அந்த மிஷின் என் கையை காயப்படுத்திவிட்டது” என்று தெரிவித்தான்.  


மாவட்ட கல்வி அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அனுமதி இல்லாமல் ஆசிரியர் அனுஜ் பாண்டேவை பள்ளியில் நியமனம் செய்தது தெரிய வந்தது. தற்போது, மாணவரின் விரலில் துளையிட்ட ஆசிரியரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.